ஆந்திர எல்லையில் மாயமான 11 காசிமேடு மீனவர்கள் 13 நாளுக்கு பிறகு மீட்பு

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர்  ஜான். மீனவர். இவருக்கு சொந்தமான விசை படகில், கடந்த 7ம்தேதி காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து டிரைவர் சோமேஷ் தலைமையில் மீனவர்கள் ஜெகன், நீலகண்டன், சூரியநாராயணன், காமேஷ், ராஜூ, சிவாஜி, பாவையா, ரவி, அப்பாராவ், பாபு உள்ளிட்ட 11 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடந்த 16ம்தேதி ஆந்திர மாநிலம், ராமைய்யாபட்டினம் மீனவ கிராமம் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, திடீரென விசைப்படகின் காற்றாடி கழந்து கடலில் விழுந்தது. இதனால் படகு கடல் நீரோட்டத்தில் ஓடத்தொடங்கியது.

கடல் நீரும் படகுக்குள் புகுந்தது. இதுகுறித்து மீனவர்கள் காசிமேட்டில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவசரகால உதவி கேட்டனர். மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன்  இதுகுறித்து கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி கடலோர காவல்படை, ஆந்திர மாநில எல்லையில் கப்பல் மூலமும் சிறிய ரக ஹெலிகாப்டர் மூலமும் மீனவர்களை தேடினர். ஆனால் அவர்களை  கண்டுபிடிக்க முடியவில்லை. காசிமேடு மீனவர்கள் நீரோட்டத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு சென்றிருக்கலாம் என கூறிய தகவலையடுத்து, கடலோர காவல் படை விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

அப்போது, காணாமல்போன விசைப்படகு கிருஷ்ணா பட்டணம் துறைமுகத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் நிற்பதை கண்டுபிடித்தனர். தமிழக மீன்வளத்துறை சார்பில் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து,  மீனவர்களையும் விசை படகையும் மீட்டுவரும்படி கூறினர். அதன்படி கயிறு கட்டி விசைப்படகில் இருந்த மீனவர்களையும்  படகையும் மீட்டு வருகின்றனர். பாதுகாப்புக்காக கடலோர காவல்படை  கப்பலும் அவர்களோடு வருகிறது. இன்று மாலை 11 மீனவர்களும்  காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>