×

கேரள அரசின் பக்ரீத் தளர்வுகள் நடவடிக்கை மக்களின் உயிரோடு விளையாடுவது போன்றதாகும் : உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!

திருவனந்தபுரம் : கேரள அரசின் பக்ரீத் தளர்வுகள் நடவடிக்கை தேவையற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்த மாதம் 18,19,20 ஆகிய 3 நாள் அனைத்து பகுதிகளுக்கும் ஊரடங்கில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த, டெல்லியில் வசிக்கும் நம்பியார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கேரள அரசு மக்களின் உயிருடன் விளையாடுகிறது. கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கு நிபந்தனையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நோய் பரவலை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் காவடி யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் கேரளாவில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஊரடங்கு நிபந்தனையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாரிமன் மற்றும் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘3 நாள் தளர்வு குறித்து 24 மணி நேரத்தில் கேரள மாநில அரசு பதில் அளிக்க வேண்டும்.” என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கேரள அரசு அறிவித்த 3 நாள் ஊரடங்கு தளர்வுகளில் இன்று கடைசி நாள் என்பதால் இனி பக்ரீத் தளர்வுகளை ரத்து செய்தால் எந்த பயனும் இல்லை.அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து கேரள அரசு இந்த 3 நாள் தளர்வை அறிவித்துள்ளது. இது மக்களின் உயிரோடு விளையாடுவது போன்றதாகும். இந்த தளர்வின் காரணமாக யாருக்காவது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம்.அப்போது நடவடிக்கை எடுக்கத் தயார், என்றும் கூறினர்.

Tags : Kerala government ,Bakreed ,Supreme Court , உச்சநீதிமன்றம்
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...