திருக்கோவிலூர் அருகே வனவிலங்கு வேட்டைக்கு சென்ற 3 வாலிபர்கள் அதிரடி கைது-நாட்டு துப்பாக்கி, பைக் பறிமுதல்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே நள்ளிரவில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, நாட்டு துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இதையடுத்து போலீசார் இரவு நேர ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த மாவட்ட எஸ்.பி. ஜியாஉல்ஹக் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே மணலூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பைக்கில் வெள்ளை நிற சாக்குடன் வந்த 3 வாலிபர்களை போலீசார் மறித்தனர்.

இருப்பினும் அவர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது, போலீசாரின் கேள்விகளுக்கு 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் கையில் வைத்திருந்த வெள்ளை நிற சாக்கு பையை பிரித்து பார்த்தனர்.

அதில், நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்களை தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், எதால் கிராமத்தை சேர்ந்த அருளப்பன் மகன் பாபு பிரவீன் (24), விக்டர் மகன் லியோ டெனிஸ் (22), குழந்தைராஜ் மகன் டேவிட் (22) என்பதும், எதால் பகுதியில் இருந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கியை எடுத்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார், பாபு பிரவீன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு பைக், ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: