×

பர்கூர் அருகே மயிலாடும்பாறையில் 2500 ஆண்டுக்கு முந்தைய மண் பானைகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி :  பர்கூர் அருகே உள்ள மயிலாடும்பாறையில் 2500 ஆண்டுக்கு முற்பட்ட 4 மண் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கைகொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் என 10 இடங்களில் தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பர்கூர் அடுத்த தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் அகழாய்வு துவங்கியது. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கட்குரு பிரசன்னா மற்றும் தொல்லியல் ஆய்வு மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வில் கடந்த, 10 நாட்களுக்கு முன்பு கல்திட்டையில், 70 செ.மீ., நீளம் உள்ள 2,500 ஆண்டுக்கு முற்பட்ட இரும்பு வாள் ஒன்றை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அதே பகுதியில் நான்கு மண் பானைகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறுகையில், ‘மயிலாடும்பாறை சானாரப்பன் மலையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ், 100க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. கடந்த 1980 மற்றும் 2003ல் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளில், இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதம் ஆய்வு மேற்கொண்டதில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, 70 செ.மீ., நீளமுள்ள இரும்பு வாள் ஒன்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதே பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 4 மண் பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 2,500 ஆண்டுக்கு முற்பட்டவையாக கருதப்படுகிறது. என்றாலும், பானைகளை ஆய்வுக்கு அனுப்பிய பிறகே அதன் சரியான காலத்தை கணிக்க முடியும்,’ என்றார்.

Tags : Mayiladuthurai ,Bargur , Krishnagiri: Four clay pots dating back to 2500 years have been found at Mayiladuthurai near Bargur. In TamilNadu
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...