ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் தாமதமாக திறப்பதால் விவசாயிகள் கடும் அவதி-விதைகள் வாங்க காத்திருக்கும் விவசாயிகள்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் காலையில் சரியான நேரத்திற்கு திறக்கப்படாமல் தாமதமாக திறப்பதால் அங்கு வரும் விவசாயிகள் மணிக்கணக்கில் காத்திருந்து  பொருட்களை வாங்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.ஜோலார்பேட்டையில் உள்ள கோடியூர் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் உள்ளது. இங்கு தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை இரண்டும் இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு ஜோலார்பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் விதைகள், விவசாய கருவிகள், சொட்டு நீர் பாசனம் உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டு வருகிறது.  இதனால் வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் அன்றாடம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை தொடர்பு கொள்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் உரம் விதைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அலுவலகம் வருகின்றனர். ஆனால் அலுவலகத்தில் பணிபுரியும் வேளாண்மை உதவி இயக்குனர் உட்பட அலுவலர்கள் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு வராமலும் காலையில் அலுவலகம் திறக்கப்பட வேண்டிய நேரத்தில் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள், அதிகாரிகள் வந்து அலுவலகத்தை திறக்கும் வரை காத்திருந்து தங்களுக்கு தேவையான விதைகளையும், மானியம் சம்பந்தமான பணிகளையும் கேட்டறிந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சின்ன மோட்டூர், பொன்னேரி, ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை 9 மணி அளவில் வட்டார அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் அலுவலகம் திறக்கப்படாமல் இருந்ததால் மணிக்கணக்கில் காத்து இருந்தனர். அதன் பிறகு 11.30 மணி அளவில் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர் ஒருவர் அலுவலகத்தை திறந்து அதன் பிறகு பணியை மேற்கொண்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கேட்டதற்கு பீல்டு ஒர்க் முடித்துவிட்டு வந்தோம் என கூறியுள்ளனர். மேலும் அலுவலகத்தில் வெளியே நோட்டிஸ் போர்டு உள்ளது. இதில் அலுவலகம் சார்ந்து பீல்டு ஒர்க் மேற்கொண்டும் விவரங்கள் குறித்து எதுவும் எழுதப்படுவதில்லை. அதேபோல் தோட்டக்கலைத் துறை வேளாண்மைத் துறை சார்ந்து என்னென்ன பொருட்கள் இருப்பு உள்ளது எந்தெந்த திட்டங்களுக்கு மானியம் உள்ளது.

அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை தெரியப்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியப் போக்கில் இருந்து வருவதால் அரசு வழங்கும் வேளாண்மை சார்ந்த திட்டங்களை விவசாயிகள் மானியத்துடன் பெற விவரம் இல்லாமல் பல்வேறு திட்டங்களை இழந்து வருகின்றனர்.

எனவே துறை சார்ந்த அதிகாரிகள் ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் பணி புரியும் அதிகாரி மற்றும் அலுவலர்களை நடவடிக்கை மேற்கொண்டு காலையில் அலுவலகத்தை உரிய நேரத்திற்கு திறக்கப்படாமல் அறிவிப்பு எதுவும் இன்றி, காலதாமதமாக அலுவலகம் திறக்கப்படுவதால் பல்வேறு பணிகளை விட்டு விவசாயிகள் மணிக்கணக்கில் காத்திருந்து பயன்களைப் பெறும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும் என பொது மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>