டெல்லி: தனது செல்போன் தற்போதும் ஒட்டுகேட்கப்படுவதாக அரசியல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் புகார்தெரிவித்துள்ளார். பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அரசியல் வியூக ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் செல்போன் கடந்த மாதத்தில் 14 முறையும் இந்த மாதத்தில் 12 முறையும் ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர், தனது செல்போன் ஒட்டுகேட்கப்படலாம் என ஏற்கனவே சந்தேகம் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக தனது செல்போன் உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுவதை நினைத்து பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுவரை 5 முறை செல்போன்களை மாற்றியுள்ளதாகவும், இருப்பினரும் செல்போன் ஒட்டுகேட்கப்படுவது நின்றபாடில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.