×

ராமநாதபுரம், நாகை, குமரியில் 4 மீன்பிடி துறைமுகங்கள், சாகர்மாலா திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பில் கட்டப்படுகின்றன : ஒன்றிய அரசு

டெல்லி : தமிழகத்தில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், 4 மீன்பிடி துறைமுகங்கள், சாகர்மாலா திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பில் கட்டப்படுகின்றன மற்றும் விரிவாக்கம் செய்யப்படுகின்றன என்று மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் சாந்தனு தாகூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

சாகர்மாலா திட்டத்தின் முக்கிய நோக்கம் கடலோர சமுதாய மேம்பாடு. மீனவர்களின் நலனுக்காக, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம், மீன்வளத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, மீன்பிடி துறைமுக திட்டங்களுக்கு ஒரு பகுதி நிதியை அளிக்கிறது. சாகர்மாலா திட்டத்தின் கீழ், ரூ.2,598 கோடி மதிப்பில் 28 மீன்படி துறைமுக திட்டங்கள் பல்வேறு அமைப்புகள் மூலம் அமல்படுத்தப்படுகின்றன. இவற்றில் ரூ.1,694 கோடி மதிப்பிலான, 17 திட்டங்களுக்கு, சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஒரு பகுதி நிதி அளிக்கப்படுகிறது. இவற்றில் 9 திட்டங்கள் நிறைவடைந்து விட்டன. மாநிலம் மற்றும் மாவட்டம் வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், 4 மீன்பிடி துறைமுகங்கள், இத்திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பில் கட்டப்படுகின்றன மற்றும் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

பிறநாடுகளுக்கு ரோந்து கப்பல்கள்:

அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (சாகர்)  (Security & Growth for All in the Region) திட்டத்தி்ன கீழ் இந்திய கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளுக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

செசல்ஸ் கடலோர பாதுகாப்பு படை பயன்பாட்டுக்காக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு ரோந்து கப்பல் செசல்ஸ் நாட்டிடம் கடந்த ஏப்ரல் 8ம் தேதி  ஒப்படைக்கப்பட்டது. இந்த காணொலி நிகழ்ச்சியில், செசல்ஸ் அதிபரிடம் 48.9 மீட்டர் நீளமுள்ள அதிவிரைவு ரோந்து கப்பலை பிரதமர் ஒப்படைத்தார். இந்த கப்பல் கொல்கத்தாவை சேர்ந்த ஜிஆர்எஸ்இ நிறுவனம் ரூ.100 கோடி செலவில் கட்டியது. கடல்சார் பாதுகாப்பில் செசல்ஸ் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இருப்பதால், இந்த ரோந்து கப்பல் அளிக்கப்பட்டது.

இதேபோன்ற அதிவிரைவு ரோந்து கப்பல்களை செசல்ஸ் நாட்டுக்கு கடந்த 2005 மற்றும் 2014ம் ஆண்டுகளிலும், மொரீசியஸ் நாட்டுக்கு 2016 மற்றும் 2017ம் ஆண்டிலும், மாலத்தீவுக்கு 2006 மற்றும் 2019ம் ஆண்டிலும் இந்தியா வழங்கியுள்ளது.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ramanathapuram ,Nagai ,Kumari ,Sagarmala ,Union Government , சாகர்மாலா
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...