மாபெரும் தலைவர்கள் வழியில் சின்னம்மா!: கிருஷ்ணகிரியில் சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!!

கிருஷ்ணகிரி: அதிமுக-வுக்கு தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து கிருஷ்ணகிரியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சசிகலா பேசும் ஆடியோ அண்மை காலமாக தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதனால் சசிகலாவுடன் தொடர்பில் இருந்து வரும் அதிமுகவினரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர். எனினும் சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் மாபெரும் தலைவர்கள் வழியில் சின்னம்மா உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் படங்களுடன் சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுள்ளன. சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் அதிமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

Related Stories: