×

எத்தனை முயற்சி செய்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது: சசிகலாவுக்கு எடப்பாடி சவால்

ஜலகண்டாபுரம்: எத்தனை முயற்சி செய்தாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தில் அதிமுக சார்பில் துப்புரவு பணியாளர்கள் 100 பேருக்கு அரிசி, காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (19ம்தேதி) நடந்தது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கர்நாடகா தற்போது மேகதாது அணை கட்டுவதாக தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. அவர்கள் அணை கட்டி விட்டால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். 16 மாவட்டங்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டதாக கூறுகின்றனர். அப்போது பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. தடுப்பூசி போட அச்சப்பட்டனர். மற்றபடி தடுப்பூசி ஏதும் வீணடிக்கப்படவில்லை. பல இடங்களில் தடுப்பு ஊசி போதிய அளவு கிடைக்காததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

மூன்றாவது அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விழிப்புடன் இருந்து போதிய அளவு தடுப்பூசி பெறுவதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகம் இருக்கிறது. அணை நிரம்ப வாய்ப்பு இருக்கிறது. அப்போது உபரிநீரை 100 ஏரிகளுக்கு திருப்பி விட முயற்சிக்க வேண்டும். சசிகலாவை ஊடகங்களும், பத்திரிகைகளும் தான் பெரிதுபடுத்துகிறது. இதை சாதகமாக்கி, சசிகலா தொடர்ந்து அதிமுக குறித்து தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

அவர் இல்லாததால் அதிமுக தோல்வி அடைந்தது என்பதை ஏற்க முடியாது. 1996, 2006 சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுக தோற்றது. அப்போது இவர் கட்சியில் தானே இருந்தார்?. அவரை பொறுத்தவரை எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் ஆலோசனை வழங்கியதாக தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதையெல்லாம் மக்கள் நம்பத்தயாராக இல்லை. எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும், சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது. உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. அதை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags : AIADMK ,Edappadi ,Sasikala , Sasikala, Edappadi, Challenge
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...