×

சொத்து தகராறில் உறவினர்கள் மோதல்: கணவனை கைது செய்ததால் காவல் நிலையத்தில் இளம்பெண் தர்ணா

திருப்போரூர்: சொத்து தகராறில் உறவினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்படி போலீசார் எதிர் தரப்பில் கணவனை கைது செய்தனர். இதனால் இளம்ெபண் காவல் நிலையம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்தர் (36). இவரது மனைவி பூவிழி. சுரேந்தருக்கும், உறவுமுறை சகோதரரான செல்வம் என்பவருக்கும் பூர்வீக வீட்டு மனையை பிரித்து கொள்வது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதையொட்டி, கடந்த வாரம் சுரேந்தர், வீட்டு மனையை சுற்றி வேலி போட முயன்றார். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை,  உறவினர்கள் சமரசம் செய்தனர்.

இந்நிலையில், நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து செல்வம், திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தனர். அதற்கு சுரேந்தரும், அவரது மனைவி பூவிழியும் எதிர்ப்பு தெரிவித்தனர். பூவிழி தனது கைக் குழந்தையுடன் எஸ்பி மற்றும் மாமல்லபுரம் டிஎஸ்பி ஆகியோரை சந்தித்து புகார் அளித்தார். பின்னர் திருப்போரூர் காவல் நிலையம் சென்று, தகராறில் ஈடுபட்ட இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் ஒரு தரப்பை மட்டும் பழி வாங்குவதாக கூறி காவல் நிலையம் முன்பு உறவினர்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, அங்கு சென்று தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எதிர் தரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து, பூவிழி போராட்டத்தை கைவிட்டார். இதையடுத்து போலீசார் சுரேந்தர் மற்றும் செல்வம் ஆகிய இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

Tags : Tarna , Relatives, Conflict, Teen girl , Tarna
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...