காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றத்தில் இருளர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் வாலாஜாபாத், உத்தரமேரூர் வட்டாரங்களில் வசிக்கும் இருளர் இன மக்கள் 59 பேருக்கு ஜாதி சான்றிதழை எம்எல்ஏ க.சுந்தர் வழங்கினார். மேலும் 2 பெண்களுக்கு ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ் வழங்கினார். ஆர்டிஓ ராஜலெட்சுமி, வட்டாட்சியர்கள் உமா, ஏகாம்பரம், திமுக நகர செயலாளர்  சன் பிராண்ட் ஆறுமுகம், உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தாலுகா நடுவக்கரை ஊராட்சி இந்திரா நகரில் 50க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களது பிள்ளைகளுக்கு ஜாதி சான்று கேட்டு, சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், வருவாய்த்துறை சார்பில் இங்குள்ள 48 பேருக்கு ஜாதி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, சாதி சான்று வழங்கும் விழா நடுவக்கரை பகுதியில் நடந்தது. திருக்கழுக்குன்றம் தாசில்தார் துரைராஜன், தலைமை தாங்கினார். துணை தாசில்தார் கார்த்திக் ரகுநாத் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு ஆர்டிஓ சாகிதா பர்வீன் கலந்து கொண்டு, 48 பேருக்கு ஜாதி சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, அப்பகுதி மக்கள்  இலவச வீட்டு மனை பட்டா மற்றும் விடுபட்டவர்களுக்கு ஜாதி சான்றிதழ், மின்சார வசதி, விதவை, முதியோர் உதவி தொகை கோரி  ஆர்டிஓவிடம் மனுக்கள் அளித்தனர்.  இதில் முன்னாள் நடுவக்கரை ஊராட்சி தலைவர் முத்துக்குமார், நெரும்பூர் வருவாய் ஆய்வாளர் நிர்மலா, விஏஓ அமித்பாட்ஷா, ஊராட்சி செயலர் ஜோதி பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>