‘உண்மையச் சொன்னது ஒரு குற்றமாங்க’ திமுக எம்எல்ஏவை பாராட்டிய அதிமுக நிர்வாகி நீக்கம்: இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிக்கை

சென்னை: திமுக எம்எல்ஏவை பாராட்டி, போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிமுக, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் எஸ்.முருகானந்தம், திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனை பாராட்டி அப்பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், ‘முதல்வன் பட பாணியில் ஒரு எம்எல்ஏ... கொரோனா காலத்தில், மண்ணச்சநல்லூர் தொகுதியில் முன்மாதிரியாக சொந்த நிதியை செலவு செய்து மக்கள் தொண்டாற்றி வரும் எம்எல்ஏ எஸ்.கதிரவனுக்கு எனது மனமார்ந்த நன்றி’ என்று போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார். இதனால், கோபம் அடைந்த அதிமுக கட்சி தலைமை, அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: அதிமுகவின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தினாலும், எஸ்.முருகானந்தம் (சமயபுரம், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுக தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.உன்மையைச் சொன்னது ஒரு குற்றம்னு கட்சியை விட்டு பொசுக்குன்னு நீங்கிட்டாங்களேன்னு முருகானந்தத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>