×

பேரவை வளாகத்தில் கலைஞர் திருவுருவ படம்: திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற நூற்றாண்டு விழா, தமிழக சட்டப்பேரவை வளாகத்துக்குள், கலைஞர் திருவுருவ படம் திறப்பு, கலைஞர் நூலக அடிக்கல், பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, கடற்கரை சாலையில் நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்க உள்ளார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு,  இந்திய குடியரசு தலைவரை முதல்முறையாக சந்திப்பதற்காக வந்தேன். அவரை சந்தித்த நேரத்தில், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு எனக்கு அவர் வாழ்த்துகளை சொன்னார்.

சென்னை மாகாணத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம், 12.1.1921 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதை நினைவுப்படுத்தக்கூடிய வகையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாட அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த விழாவிற்கு தலைமை தாங்கி விழாவினை நடத்த வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் நான் கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். அந்த விழாவில், தலைவர் கலைஞர் திருவுருவ படத்தை, சட்டமன்ற வளாகத்திற்குள் திறந்து வைக்கவேண்டும் என்ற அந்த செய்தியையும் சொல்லி இருக்கிறோம்.

அதையொட்டி மதுரையில் தலைவர் கலைஞர் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலக அடிக்கல் நாட்டு விழாவையும், சென்னை கிண்டியில் அமையவிருக்கக்கூடிய  அரசு பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவையும், அதேபோல் சுதந்திரம் பெற்று 75வது ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் அமையவிருக்கக்கூடிய நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார். தேதியை இரண்டொரு நாட்களில் வழங்குவதாக எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்.

7 பேர் விடுதலை, நீட் தேர்வு குறித்து பேசினீர்களா?
அதை பற்றி பேசவில்லை. 7 பேர் விடுதலையை பொறுத்தவரை, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். எனவே தொடர்ந்து திமுக குரல் கொடுக்கும்.

கொரோனா 3வது அலை குறித்தும், பள்ளி, கல்லூரிகள் திறக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
3வது அலை வரக்கூடாது என்பதுதான், எல்லோருடைய எண்ணமும். பள்ளி, கல்லூரிகள் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் திறக்க முடியாத நிலையில் இருக்கிறது. எனவே அது குறித்து நிச்சயமாக பெற்றோர், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துபேசி, பிறகு முடிவு எடுக்கப்படும்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திமுகவின் நிலை என்ன?
ஏற்கனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி என்னென்ன விவகாரங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்று விவாதித்து இருக்கிறோம்.
அதுகுறித்து நாடாளுமன்ற மக்களவை குழு தலைவரும் மாநிலங்களவை குழு தலைவரும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் சொல்லி அந்த அடிப்படையில் பேச இருக்கிறோம்.

* கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை இல்லை
மேகதாது அணை விவகாரத்தில் குடியரசு தலைவரை சந்தித்து பேசுவீர்களா?
மேகதாது அணை பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்தபோது, அந்த கோரிக்கையை வைத்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களை எல்லாம் அழைத்து கூட்டம் நடத்தி, தீர்மானம்  நிறைவேற்றி, அதை தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து, எங்களுடைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி குழு டெல்லிக்கு வந்து ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து  அப்பிரச்னை குறித்து விவாதித்திருக்கிறார்கள். ஜல்சக்தித் துறை அமைச்சரும் நிச்சயமாக அதற்கு நாங்கள் அனுமதி தரமாட்டோம் என்ற உறுதியை தந்திருக்கிறார்.

கர்நாடக முதலமைச்சர், கண்டிப்பாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அணை கட்டியே தீருவோம் என்று சொல்லி இருக்கிறாரே?
எங்களுக்கு பிரதமர் நம்பிக்கையோடு உறுதி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஜல்சக்தித் துறை அமைச்சரும் உறுதி  கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இது இருக்கிறது.

எனவே நாங்கள் அதை சட்டப்படி சந்திப்போம். மேகதாது அணை தொடர்பாக ஆலோசனை நடத்த கர்நாடகா அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வீர்களா?
பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று எங்களுடைய அமைச்சர் சொல்லி இருக்கிறார். அதுதான் செய்தி.

Tags : President ,Chief Minister ,MK Stalin , Artist portrait in the Assembly premises: President participates in the opening ceremony Chief Minister MK Stalin's announcement
× RELATED சொல்லிட்டாங்க…