×

2014 முதல் 2019 வரை 6 ஆண்டுகளில் நாடு முழுவதும் 326 தேசத் துரோக வழக்குபதிவு: வெறும் 6 பேருக்கு மட்டுமே தண்டனை விதிப்பு

புதுடெல்லி: ராணுவ முன்னாள் மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வோம்பட்கிரி என்பவர், தேச துரோக சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே தேச துரோக சட்டப் பிரிவை எதிர்த்து, பத்திரிகையாளர்கள் கிஷோர் சந்திமரா, கன்னையா லால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேற்கண்ட மனுக்கள் தொடர்பான விசாரணையின் போது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசதுரோக வழக்கிற்கான சட்டப்பிரிவு தற்போது தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத்துரோக சட்டத்தை கடைப்பிடிப்பது ஏன்? மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட தேச துரோக சட்டம், விடுதலை பெற்ற பின்னரும் தேவைப்படுகிறதா? விசாரணை அமைப்புகலால் தேச துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அது வேதனை அளிக்கிறது.  இந்த சட்டம் மத்திய  அரசுக்கு குரல் கொடுக்கும்  எதிர்க்கட்சிகள் மீதும் அப்பாவி மக்கள் மீதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய  அரசு பதிலளிக்க உத்தரவிடுகிறோம்’ என்று தெரிவித்தது. இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சக தரவுகளின்படி, கடந்த 2014 முதல் 2019ம் ஆண்டு வரை தேசத்துரோக சட்டத்தின் கீழ் மொத்தம் 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக அசாமில் 54 வழக்கு பதிவாகி உள்ளன. மொத்த வழக்குகளில், 141 வழக்குகள் தொடர்பாக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. கிட்டதிட்ட ஆறு ஆண்டு இடைவெளியில் வெறும் ஆறு பேர் மீது மட்டுமே குற்றம் உறுதிசெய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. 2020 முதல் இதுவரை எத்தனை பேர் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது என்ற விபரங்களை உள்துறை அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. அசாமில் பதிவு செய்யப்பட்ட 54 தேசத்துரோக வழக்குகளில், 26 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், 25 வழக்குகளில் விசாரணைகள் நிறைவடைந்தன. ஜார்கண்ட்டில் பதியப்பட்ட 40 வழக்குகளில் 29 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. 16 வழக்குகளின் விசாரணை முடிக்கப்பட்டது. அதில் ஒருவர் மட்டுமே தண்டனை பெற்றார். ஹரியானாவில், தேசத்துரோக சட்டத்தின் கீழ் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அதில் 19 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டன. ஆறு வழக்குகளில் விசாரணை முடிந்தது, அதில் ஒருவர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளார். பீகார், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கேரளா தலா 25 வழக்குகளை பதிவு செய்துள்ளன.  கர்நாடகாவில் 22 தேசத்துரோக வழக்கு, உத்தரப்பிரதேசத்தில் 17, மேற்கு வங்கத்தில் ஐந்து, டெல்லியில் நான்கு, மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய மாநில மற்றும் எவ்வித வழக்கும் பதியவில்லை. மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தமாக 2019ம் ஆண்டில் 93 தேசத் துரோக வழக்கு, 2018ல் - 70, 2017ல் - 51, 2014ல் - 47, 2016ல் - 35, 2015ல் - 30 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று, அந்த தரவுகளில் கூறப்பட்டுள்ளன.

Tags : 326 treason cases filed across the country in 6 years from 2014 to 2019: just 6 convicted
× RELATED குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9...