கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலை மருத்துவமனையாக மாறுகிறது!

சென்னை : சென்னை கிண்டி மற்றும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல்கள் விரைவில் எம்ஜிஎம் ஹெல்த் கேர் குழுமத்தின் வசமாக இருக்கின்றன.தொழில் அதிபர் பழனி ஜி பெரியசாமிக்கு சொந்தமான அப்பு ஓட்டல்ஸ் லிமிடெட் சென்னை கிண்டி மற்றும் கோவை ஆகிய இடங்களில் லீ மெரிடியன் ஓட்டல்களை நடத்தி வந்தது.இந்நிறுவனத்திற்கு மேலும் சில நட்சத்திர விடுதிகளும் உள்ளன.அப்பு ஓட்டல்ஸ் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதிக் கழகத்திற்கு சுமார் ரூ.18 கோடி நிலுவை தொகை வைத்து இருந்தது. இந்த தொகை 2019ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வாராகடனாக அறிவிக்கப்பட்டது. அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் நிலுவை தொகையை செலுத்தும் நிலை இல்லை என கூறியதால், இந்திய சுற்றுலா நிதி கழகம் திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இது தொடர்பான மனுவை மே 5ம் தேதி விசாரணைக்கு ஏற்ற தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை தொடர்ந்து விசாரித்து வந்தது. அப்போது தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்த அப்பு ஹோட்டல்ஸ்  உரிமையாளர் பெரியசாமி, கொரோனா ஊரடங்கு எதிரொலியாக பணம் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்து இருந்தார். 3 மாதம் அவகாசம் வழங்குமாறும் நிறுவனம் சார்பில் முறையிடப்பட்டது. இந்த நிலையில் கடன்களை அடைப்பதற்காக அப்பு ஓட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை விற்க சில நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கைகளும் கோரப்பட்டன.

மாதவ் தீர், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மற்றும் கொட்டக் ஆகிய நிறுவனங்கள் தீர்மானத் திட்டத்தை தாக்கல் செய்து இருந்தன.இதில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே. ராஜகோபாலன் சமர்ப்பித்த ரூ.423 கோடி மதிப்புள்ள கையகப்படுத்தும் தீர்மான திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலை மருத்துவமனையாக மாற்ற திட்டமிட்டுள்ள எம்ஜிஎம் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலை சீரமைத்து நட்சத்திர ஹோட்டலாகவே தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.இருப்பினும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய லீ மெரிடியன் ஹோட்டலை நடத்தும் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Related Stories: