×

வியாபாரத்தை வளப்படுத்திக் கொண்ட சீரம் நிறுவனம்: மனைவி, மகளுக்காக ‘தடுப்பூசி பிச்சை’ எடுக்கிறேன்! கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தன்னார்வலர் புலம்பல்

புனே: கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர், தனது மனைவி மற்றும் மகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார். இவர், சீரம் நிறுவனம் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  கடந்த 2019 கடைசியில் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் ஊடுருவிய காலகட்டத்தில், தடுப்பூசி தயாரிப்புக்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. முதற்கட்டமாக விலங்குகள் தொடங்கி மனிதர்களுக்கு பலகட்ட பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டு கடந்த 6 மாதமாக மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முன்னதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்ற போது, தன்னார்வலராக பங்கேற்ற முதல் 10 இந்தியர்களில் புனேவை சேர்ந்த தன்னார்வலர் சந்தோஷ் கே.மோர் (50) என்பவரும் ஒருவராவார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் மருந்தையும், அதே ஆண்டு செப்டம்பர் 29ம் தேதியன்று இரண்டாவது மருந்தையும் பரிசோதனைக்காக போட்டுக் கொண்டார். ஆனால் இன்று அவரது மனைவி மற்றும் மகளுக்கு தடுப்பூசி கிடைக்க பெறாமல் அவதியுற்று வருகிறார்.

பிரதமர் மோடி, சீரம் நிறுவனம், உள்ளூர் நிர்வாகம் வரை பலரிடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து  சந்தோஷ் கே.மோர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக ஆரம்பகால மருத்துவ பரிசோதனைக்கு எவரும் முன்வராத நேரத்தில், நான் தன்னார்வலராக என்னை பரிசோதனைக்கு உட்படுத்த சம்மதித்தேன். இதற்கு எனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ராதா (17), இஷா (19) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, 12 முதல் 18 வயதுடையவர்களுக்கான ஜிகோவ்-டி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை ஜிடாக் மருத்துவ நிறுவனம் தொடங்கியது. இந்த மருத்துவ பரிசோதனையில் எனது இளைய மகள் ராதா, தன்னார்வலராக இணைந்தார். அவருக்கு இதுவரை மூன்று மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று மனிதநேயமற்ற முறையில் என் மனைவி மற்றும் மற்றொரு மகளுக்கு தடுப்பூசி போடுமாறு சீரம் நிறுவனத்திடம் கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதுதொடர்பாக, பிரதமர் மோடியின் அலுவலகம், சீரம் நிறுவனம் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தும் எவரும் கண்டுகொள்ளவில்லை.

கடந்த சில மாதங்களாவே ‘கோவின்’ ஆப்ஸ் மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்தோம். ஆனால், தடுப்பூசி பற்றாக்குறையால் காரணங்களை கூறி என் மனைவிக்கும், மகளுக்கும் தடுப்பூசி போடவில்லை. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் கோவிஷீல்டு மருத்துவ பரிசோதனையில் நான் பங்கேற்க முடிவு செய்தபோது, என் மனைவியும் என் மகள்களும் அழுததை என்னால் மறக்கமுடியாது. ஆனால், இந்த மருந்து நிறுவனங்களுக்கு எங்கள் தியாகத்தின் மதிப்பு தெரியவில்லை. அவர்கள் எங்களை பயன்படுத்திக் கொண்டார்கள். தங்களின் வியாபாரத்தையும் பெருக்கிக் கொண்டனர்.
மருத்துவ பரிசோதனை தன்னார்வலர்கள் மீது மருந்து நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் நடத்திய ஒருவித சுரண்டலாகும். குழந்தை தன்னார்வலர்களின் பற்றாக்குறை ஏற்பட்ட போது, நான்கு பெற்றோர்களை ஊக்குவித்து, அவர்களின் குழந்தைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினேன். நாட்டிற்காக தன்னலமற்ற பங்களிப்பை நாங்கள் அளித்த போதிலும், என் மனைவி மற்றும் மற்றொரு மகளுக்காக ‘தடுப்பூசி பிச்சை’ எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்’ என்று கவலையுடன் தெரிவித்தார்.

Tags : Corona Vaccine , Serum company that enriched the business: I take ‘vaccine begging’ for wife and daughter! Corona Vaccine Testing Volunteer Lament
× RELATED கொரோனோ தடுப்பூசி கண்டுபிடித்த 2...