×

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 247 வழக்குகள் பதிவு

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று (18.07.2021)  கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 336 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத 815 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 06 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.05.2021 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு 21.06.2021 காலை முதல் 31.07.2021 காலை வரை  தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும்  அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் குழுவினர் நேற்று (18.07.2021) மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக  318 இருசக்கர வாகனங்கள், 16 ஆட்டோக்கள் மற்றும் 2 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 336 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 815 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 06 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu government , 247 cases were registered yesterday for violating the corona curfew rules during the curfew announced by the Tamil Nadu government.
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...