×

முதல் 15 ஓவரிலேயே வெற்றியை உறுதி செய்தனர்: இளம் வீரர்கள் ஆக்ரோஷமானவர்கள்..! கேப்டன் தவான் பேட்டி

கொழும்பு: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒன்டே மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவரில்அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சாமிகா கருணாரத்னே 43, கேப்டன் தசுன் ஷனகா 39 , சரித் அசலங்கா 38 ரன் எடுத்தனர். இந்திய பந்து வீச்சில் குல்தீப், சஹால், தீபக் சாகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.பின்னர் 263 ரன் இலக்கை துரத்திய இந்திய அணியில் பிரித்வி ஷா அதிரடியாக 24 பந்தில் 9 பவுண்டரியுடன் 43 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷனும் அதிரடி காட்டினார். 42 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன 59 ரன் எடுத்து அவர் ஆட்டம் இழந்தார்.

பின்னர் வந்த மனிஷ்பாண்டே 26 ரன்னில் டி சில்வா பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு புறம் நிதானமாக ஆடிய கேப்டன் தவான், ஆட்டமிழக்காமல் நின்று 95 பந்துகளில் 86 ரன்கள் (6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.  36.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன் எடுத்த இந்திய அணி, இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.  கேப்டன் தவான் கூறுகையில், ‘‘எங்கள் இளம்வீரர்கள் அனைவரும் ஆக்ரோஷமானவர்கள். இன்று அவர்கள் விளையாடிய விதம் மிகப்பெரியது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் பழைய பார்ம்முக்கு திரும்பினர். ஐபிஎல்லில் விளையாடியதால், அவர்களுக்கு நிறைய நம்பிக்கை கிடைக்கிறது. பிரித்வி ஷா, இஷான் முதல் 15 ஓவரிலேயே ஆட்டத்தை வெற்றிக்கு திருப்பினர்’’, என்றார்.

இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில், ‘‘அவர்கள் நன்றாக பந்து வீசினர். இந்தியர்கள் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்தனர். பந்து நன்றாக பேட்டிற்கு வருவதால் நாங்கள் வேகத்தை மாற்ற வேண்டியிருந்தது. அடுத்த ஆட்டத்தில், நாங்கள் அதை மேம்படுத்த வேண்டும்’’, என்றார். ஆட்டநாயகன் பிரித்வி ஷா கூறுகையில், ‘‘பேட் செய்ய நான் உள்ளே சென்றபோது ராகுல் டிராவிட் எதுவும் சொல்லவில்லை. நான் என் உள்ளுணர்வோடு சென்று பவுண்டரிகளை விரட்டினேன். ஒரு பேட்ஸ்மேனாக நான் ஸ்கோரை உயர்த்த முயற்சிக்கிறேன்.  ஆடுகளம் நன்றாக இருந்தது. வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அவுட் ஆனதால் ஏமாற்றமடைந்தேன். தலையில் அடிபட்ட பிறகு நான் கொஞ்சம் கவனம் இழந்தேன்’’, என்றார்.

Tags : Captain Dhawan , The young players who ensured victory in the first 15 overs were aggressive ..! Interview with Captain Dhawan
× RELATED முதல் டி20 போட்டியில் 38 ரன்...