×

கட்டுக்குள் வராத கொரோனா!: அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழா; குதிரை சந்தை 2வது ஆண்டாக ரத்து..!!

ஈரோடு: கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அந்தியூரில் உள்ள புகழ்பெற்ற குருநாதசாமி கோயில் திருவிழா மற்றும் குதிரை சந்தை 2வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற குருநாதசாமி கோயில் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும் தேர் திருவிழா, அதையொட்டி நடைபெறும் குதிரை சந்தை மற்றும் கால்நடை சந்தை தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது. ஒருவாரம் கோலாகலமாக நடைபெறும் குதிரை சந்தையை காண தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர் திருவிழா மற்றும் குதிரை சந்தை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா முழுவதுமாக கட்டுக்குள் வராததால் இந்த ஆண்டும் குருநாதசாமி கோயில் தேர் திருவிழா; குதிரை சந்தை ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழா மற்றும் குதிரை சந்தை ரத்து செய்யப்பட்டுள்ளதால் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வடஇந்தியாவில் நடைபெறும் புஷ்கர் குதிரை சந்தைக்கு நிகராக தென்னிந்தியாவில் அந்தியூர் குதிரை சந்தை மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,Andur Kurunegamy Temple festival ,Horseshoe , Corona, Anthiyur Kurunathasamy Temple Festival, Horse Market
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...