×

பிறந்த நாள் பரிசு என்ற பெயரில் ஸ்பெயினிலிருந்து கூரியரில் கடத்திய போதை மாத்திரைகள், ஸ்டாம்புகள் பறிமுதல்..!

மீனம்பாக்கம்: பிறந்த நாள் பரிசு என்ற பெயரில் ஸ்பெயின் நாட்டில் இருந்து கூரியர் பார்சலில் போதை மாத்திரைகள், ஸ்டாம்புகள் வரவழைத்த 2 ஓவிய கலைஞர்கள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள், ரூ.6 லட்சம் மதிப்புடைய போதை ஸ்டாம்புகள், ரூ.2.5 லட்சம் மதிப்புடைய கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் இருந்து சரக்கு விமானம் நேற்று சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த கூரியர் பார்சல்களை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது ஸ்பெயினில் இருந்து புதுவை மாநிலம் அரோவில் நகரில் உள்ள ஒரு முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது.

அதற்குள், பிறந்தநாள் பரிசுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பார்சலை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அதற்குள், 994 போதை மாத்திரைகளும், 249 போதை ஸ்டாம்புகளும் இருந்தன. சர்வதேச மதிப்பு ரூ.56 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து, அந்த முகவரிக்கு சுங்கத்துறையின் தனிப்படையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த முகவரியில் திருநெல்வேலியை சேர்ந்த ரூபக் மணிகண்டன் (29), லாய் விகூஸ் (28) இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர். 2 பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புடைய 5.5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

தீவிர விசாரணையில், இவர்கள் இயற்கை ஓவிய கலைஞர்கள் என்பதும், வெளிநாடுகளில் இருந்து போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகளை வரவழைத்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அதைப்போல் ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து கஞ்சா போதை பொருளையும் வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரையும் சுங்கத்துறையினர் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.58.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள், கஞ்சா போதை பொருட்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Spain , Seizure of drugs and stamps smuggled by courier from Spain in the name of birthday gift ..!
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...