கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு பிரான்ஸ் அனுமதி: இதுவரை மொத்தம் 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி

பாரிஸ்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் பயணம் செய்ய 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி அளித்துள்ளன என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனா வாலா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் மக்கள் பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான கிரீன் பாஸ் சான்றிதழுடன் ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரான்ஸ், பிரான்ஸில் இருந்து இத்தாலி என சென்று வரலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் வழங்கவில்லை. இதனால் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் ஐரோப்பாவில் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே சில ஐரோப்பிய நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்தன. இப்போது பிரான்ஸ் நாடும் கோவிஷீல்டு தடுப்பூசியைச் செலுத்தியவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது பிரான்ஸ் அரசும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கோவிஷீல்டு இப்போது 16 ஐரோப்பிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: