மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்துங்கள்!: மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ்..!!

டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா விதி எண் 267ன் கீழ் நோட்டீஸ் ஒன்றை விடுத்துள்ளார். பரபரப்பான சூழலுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இந்த மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டுமின்றி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கூட்டத்தொடரானது வழக்கமான நேரமான காலை 11 மணிக்கு கூடுகிறது. இன்றைய நிகழ்வில் பல்வேறு அலுவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய அமைச்சரவை சகாக்களை அறிமுகம் செய்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கு தமிழகம், புதுச்சேரி மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் இருக்கக்கூடிய லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே இன்றைக்கு பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என்று திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார். சபாநாயகர் இதுகுறித்து அனுமதி அளிக்கிறாரா? விவாதம் நடத்த ஒப்புக்கொள்கிறாரா? என்பது அவை கூடிய பிறகே தெரியவரும்.

Related Stories:

>