×

ஒன்றிய அமைச்சர்களை உளவு பார்த்தாரா மோடி? இஸ்ரேலிய நிறுவனத்தை கொண்டு உளவுபார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

டெல்லி: பிரதமர் மோடியின் அமைச்சரவை சகாக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி, பத்திரிகையாளர்கள், தன்னார்வலர்கள் என 300 பேரை இஸ்ரேலிய நிறுவனத்தை கொண்டு உளவுபார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த NSO நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உலகம் முழுவதும் உளவுபார்க்கப்பட்டவர்கள் பட்டியலை 17 சர்வதேச ஊடகங்களும் பாரிஸை சேர்ந்த கிரிட்டன் சோரிஸ் தொண்டு நிறுவனம் அம்னிஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.

50,000 பேர் கொண்ட இந்த பட்டியலில் 300க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். இந்த பட்டியலை பார்க்கும் போது அமைச்சர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என யாரும் தப்பவில்லை என்று உறுதியாகிறது. இந்தியாவை பொறுத்தவரை 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அதிகமானோர் உளவு வலையில் சிக்கி இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 2 அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், மூத்த வழக்கறிஞர்கள், 40 பத்திரிகையாளர்கள், திருமுருகன் காந்தி உள்ளிட்ட தன்னார்வலர்கள் என உளவு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து புலனாய்வு செய்த இஸாம் சிங், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் சொத்துமதிப்பு ஒரே ஆண்டில் சுமார் 16,000 மடங்கு அதிகரித்தது தொடர்பாக செய்தி சேகரித்த ரோகினி சிங், பிரதமர் மோடி அமித்ஷா மீதான விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில் தேர்தல் ஆணையத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகளை ஆராய்ந்த ரித்திகா சோப்ரா, ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை அம்பலப்படுத்திய முஜமின் தலில் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பெகாஸஸ் பட்டியலில் இருந்த ஒன்றிய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட முக்கிய நபர்களின் பெயர் வெளியிடப்படவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பெகாஸஸ் உளவு திட்டம் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள் பெரும் பிரளயத்திற்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Modi ,EU , Prime Minister Modi, spy agency
× RELATED மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில்...