×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை!: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 18,000 கனஅடி நீர் வரத்து அதிகரிப்பு

தர்மபுரி: தொடர் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 16,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 18,000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதேசமயம் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் குறைந்துள்ளது.

இரு அணைகளிலும் நேற்று 17,500 கனஅடியாக இருந்த நீர் வெளியேற்றம் இன்று 12,500 கனஅடியாக குறைந்துள்ளது. இதேபோல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.87 அடியில் இருந்து 72.61 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 4,181 கனஅடியில் இருந்து 12,804 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று 1,086 கனஅடியாக இருந்த நீர்வரத்து ஒரேநாளில் 4,492 கனஅடியாக அதிகரித்துள்ளது. 105 அடியாக இருந்த நீர்மட்டம் 95.89 அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடக்குமொழி பாசனத்திற்காக 500 கனஅடி மற்றும் குடிநீருக்காக 100 கனஅடி என மொத்தம் 600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Okanagan Cauvery River , Heavy rain, Okanagan, Cauvery, 18,000 cubic feet of water
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடி அதிகரிப்பு..!!