தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை பா.ஜ பிரமுகர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவில் வழக்கு

சென்னை:  கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மேனகா (39), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வருபவர் பார்த்தசாரதி (55). இவர், பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பூர் கிழக்கு பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக உள்ளார். கடந்த 2018ம் ஆண்டு இவர் அடிக்கடி மேனகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மேனகா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பார்த்தசாரதியை கைது செய்தனர்.

இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, தற்போது மேனகா மற்றும் அவரது 15 வயது மகளுக்கு பார்த்தசாரதி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மேனகா சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்திருந்தார். அந்த மனு புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு  மாற்றப்பட்டு, கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பார்த்தசாரதி அடிக்கடி மேனகா மற்றும் அவரது 15 வயது மகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>