காசிமேட்டில் மீன்வரத்து அதிகரிப்பு ஆடி மாதம் என்பதால் விலை உயர்வு

சென்னை: காசிமேட்டில் நேற்று பெரிய மீன்கள்வரத்து அதிகம் இருந்தும், ஆடி மாதம் என்பதால் ஏராளமானோர் குவிந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த சில வாரங்களாக ஏராளமான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. ஆனால், போதிய மீன்கள் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் சிறிய ரக மீன்கள்தான் கிடைத்தது. இதனால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீனுக்கு நல்ல விலை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவே ஏராளமான விசைப்படகுகள் கடலில் இருந்து கரை திரும்பின. மீனவர்களின் வலையில் பெரிய அளவிலான மீன்களும் கிடைத்ததால், மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை சென்னை மாநகரில் இருந்து ஏராளமானோர், மீன் வாங்க காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். கூட்டம் காரணமாக மீன் விலை பல மடங்கு எகிறியது. குறிப்பாக, பாறை மீன் ஒரு கிலோ 900 ரூபாய்க்கும், வஞ்சிரம் ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கும், வவ்வால் ஒரு கிலோ 1,100 ரூபாய்கும், சங்கரா ஒரு கிலோ 450 ரூபாய்கும், கடம்பா ஒரு கிலோ 350 ரூபாய்க்கும், நண்டு ஒரு கிலோ 400 ரூபாய்க்கும் விற்றது. ஆனாலும் விலையேற்றத்தை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றனர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories:

>