×

எண்ணூர் துறைமுகம் - மீஞ்சூர் இடையே சரக்கு கப்பல் மோதி விசைப்படகு மூழ்கியது: கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு

சென்னை: எண்ணூர் துறைமுகம் - மீஞ்சூர் இடையே நேற்று அதிகாலை கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதியதில் இரண்டாக பிளந்து மூழ்கியது. கடலில் குதித்து தத்தளித்த 7 மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் காசிமேடு பகுதியில் பரபரப்பு நிலவியது. சென்னை காசிமேடு பவர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (50). விசைப்படகு உரிமையாளர். இவரது தலைமையில் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் (49), அஜித்குமார் (25), ரஞ்சித் (25), மணி (50), ராஜாக்கண்ணு (55), அரி (50) ஆகிய 7 மீனவர்கள் நேற்று அதிகாலை 2 மணி அளவில் காசிமேடு பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். எண்ணூர் துறைமுகம் - மீஞ்சூர் இடையே சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்பட்டது.

அப்போது, எண்ணூர் துறைமுகத்தில் இருந்து வெளியே வந்த சரக்கு கப்பல், விசைப்படகு மீது மோதியது. இதில் பயங்கர சத்தத்துடன் விசைப்படகு இரண்டாக பிளந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், வயர்லெஸ் மூலம், தங்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி விட்டது. எங்களை காப்பாற்றுங்கள் என சக மீனவர்களுக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் படகு கடலில் மூழ்க தொடங்கியதால் மீனவர்கள் கடலில் குதித்து கையில் கிடைத்த பொருட்களுடன் நீந்தி கொண்டிருந்தனர். தகவலின்பேரில், சக மீனவர்களான எழிலரசன், குமார் ஆகியோர் விசைப்படகு மூலம் சம்பவ இடத்துக்கு புறப்பட்டனர்.

இவர்கள் செல்ல வெகுநேரம் ஆனதால் 2 மணி நேரம் கடலில் உயிருக்கு போராடினர். இதையடுத்து படகில் சம்பவ இடத்துக்கு சென்ற மீனவர்கள், 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். இதில் ராஜாக்கண்ணு என்பவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையறிந்ததும் மீனவர் சங்க தலைவர் அரசு, ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ எபினேசர், மீன்வளத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர்களிடம் நலம் விசாரித்தனர்.

கடலில் மூழ்கிய விசை படகை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், சேதமடைந்த விசை படகுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடலில் நடந்த விபத்து குறித்து மீன்பிடி துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Harbor ,Minsur , Ennore Port, Minsur, Freight, Fishermen Rescue
× RELATED திமுக அரசு கல்வி, மருத்துவத்துக்கு...