×

மும்பையில் கனமழை சுவர் இடிந்து 30 பேர் பலி

மும்பை: மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தது 30 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்தனர்.  மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த மழையால், பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாகின. ரயில் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட தூர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டன. மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மும்பை செம்பூர் மகுல் பகுதியில் உள்ள பாரதி நகரில் சுற்றுச்சுவர் ஒன்று மண் சரிவால் இடிந்து வீடுகளின் மீது விழுந்ததில், அடுத்தடுத்து இருந்த சில வீடுகள் இடிந்தன.

நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டது. இதில் 19 பேர் இறந்தனர். காயம் அடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இதுபோல், விக்ரோலி புறநகர் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மண்சரிவால்  6 குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் இறந்தனர். காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாண்டூப்பில் உள்ள வனத்துறை அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 16 வயது சிறுவன் இறந்தான்.

இறந்தவர்களின் குடும்பத்துக்கு, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுபோல், விக்ரோலி, செம்பூர் பகுதியில் நடந்த  விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக மோடி அறிவித்துள்ளார்.

Tags : Mumbai , Mumbai, heavy rain, kills
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...