கடும் எதிர்ப்புகளை மீறி சோனியா அறிவிப்பு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவஜோத் சிங் சித்து நியமனம்: புதிதாக 4 பேருக்கு செயல் தலைவர் பதவி

சண்டிகர்: பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவஜோத் சிங் சித்துவை சோனியா காந்தி நியமித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு இங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இம்மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் அமைச்சர் நவஜோத் சிங் சித்துவுக்கும் ஏற்பட்டுள்ள மோதலால், சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால், இதற்கு அமரீந்தர் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால், சித்துவையும் அமரீந்தர் சிங்கையும் சமரசம் செய்வதற்காக நேற்று முன்தினம் இம்மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கரும், கட்சி மேலிட பொறுப்பாளர் ஹரிஸ் ராவத்தும் தனித்தனியாக சந்தித்து பேசினர். அதில் பலன் ஏற்படவில்லை.

இதனால், இந்த பிரச்னையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக இம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகளின் கூட்டத்தை சுனில் ஜக்கார் இன்று மாலை கூட்டுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்க சம்மதிப்பதாக அமரீந்தர் சிங் நேற்றிரவு திடீரென அறிவித்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்ட அறிவிப்பில், சித்துவை தலைவராக நியமிக்கும் உத்தரவு வெளியானது. அவருடன் சங்கத் சிங் கில்சியன், சுக்விந்தர் சிங் தானி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நக்ரா ஏற்கனவே வகித்து வந்த சிக்கிம், திரிபுரா, நாகலாந்து மாநிலங்களுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>