×

இலங்கையுடன் முதல் ஒருநாள் இந்திய அணிக்கு 263 ரன் இலக்கு

கொழும்பு: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணிக்கு 263 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கொழும்பு, பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பானுகா இருவரும் இலங்கை இன்னிங்சை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 49 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

அவிஷ்கா 33 ரன் எடுத்து சாஹல் சுழலில் பாண்டே வசம் பிடிபட்டார். அடுத்து மினோத் உடன் பானுகா ராஜபக்ச இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தது. ராஜபக்ச 24, மினோத் 27 ரன் எடுத்து குல்தீப் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தனஞ்ஜெயா 14 ரன்னில் வெளியேற, சரித் அசலங்கா 38, வனிந்து ஹசரங்கா 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் ஷனகா 39 ரன் எடுக்க, இசுரு உடனா 8 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய சமிகா கருணரத்னே இலங்கை ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். கடைசி பந்தில் துஷ்மந்த சமீரா (13 ரன்) ரன் அவுட்டாக, இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன் குவித்தது. சமிகா கருணரத்னே 43 ரன்னுடன் (35 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் சாஹல், குல்தீப், தீபக் சாஹர் தலா 2, ஹர்திக், க்ருணால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 263 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, கேப்டன் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். எடுத்த எடுப்பிலேயே பிரித்வி அதிரடியில் இறங்கி மிரட்டினார்.பிரித்வி 43 ரன் (24 பந்து, 9 பவுண்டரி) விளாசி தனஞ்ஜெயா பந்துவீச்சில் அவிஷ்கா வசம் பிடிபட்டார். அடுத்து தவானுடன் இஷான் கிஷண் இணைந்தார். தவான் நிதானமாக விளையாட, இஷான் பவுண்டரியும் சிக்சருமாக விளாசி இலங்கை பந்துவீச்சை பதம் பார்த்தார். இதனால் இந்திய அணி ஸ்கோர் ஓவருக்கு 10 ரன் என அதிவேகமாக அதிகரித்தது. 10 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன் எடுத்திருந்தது.

Tags : India ,Sri Lanka , Sri Lanka, first ODI, Indian team, run target
× RELATED மக்களவைத் தேர்தல் நடைமுறையைக் காண 23 நாடுகளின் அதிகாரிகள் இந்தியா வருகை