×

நாட்டில் 2014 - 2019ம் ஆண்டு வரை 326 தேசத் துரோக வழக்குகள் பதிவு: 6 பேருக்கு மட்டுமே தண்டனை விதிப்பு

புதுடெல்லி:  நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில்  மொத்தம் 326 தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் மகாத்மா காந்தி போன்றவர்களை முடக்குவதற்காக தேசத் துரோக சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்போதும் தேவையா?’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர்.  இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி கடந்த 2014 முதல் 2019ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தேசத் துரோக சட்டத்தின் கீழ் மொத்தம் 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகபட்ச வழக்குகள் அசாமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மொத்த வழக்குகளில் 142ல் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளில் 6 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். 2020ம் ஆண்டுக்கான வழக்கு விவரங்கள் உள்துறை அமைச்சகத்திடம் இல்லை. அசாம் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 54 வழக்குகளில் ஒரு வழக்கில் கூட இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை. ஜார்க்கண்டில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரியானாவில் பதிவு செய்யப்பட்ட 31 வழக்கில் ஒருவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பீகார், ஜம்மு காஷ்மீர், கேரளாவில் தலா 25,  கர்நாடகாவில் 22, உத்தரப் பிரதேசத்தில் 17, மேற்கு வங்கத்தில் 8, டெல்லியில் 4, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரகாண்டில் தலா ஒரு தேச துரோக வழக்குகள் பதிவாகி உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் 2019ம் ஆண்டு மட்டும் 93 தேசத் துரோக வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. 2018ம் ஆண்டில் இரண்டு பேரும், 2014, 2016, 2017, 2019ம் ஆண்டில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்குகள் பற்றிய விவரம் இதில் குறிப்பிடப்படவில்லை.

ஒன்று கூட இல்லை
மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம், அந்தமான் மற்றும் நிகோபர், லட்சத்தீவு, புதுச்சேரி, சண்டிகர், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர்ஹவேலியில் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேசத் துரோக வழக்கு கூட பதிவாகவில்லை.

Tags : Cases of treason, sentencing
× RELATED நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தி: தேர்வு முகமை