×

டிஎன்பிஎல் சீசன் 5 இன்று தொடக்கம் முதல் லீக் ஆட்டத்தில் கோவை - சேலம் மோதல்: சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை

சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் 5வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் கோவை - சேலம் அணிகள் மோதுகின்றன. 2016ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இத்தொடரில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு கொரோனாவால் ரத்தான நிலையில், இந்த ஆண்டு 5வது தொடர் கட்டாயம் நடத்தப்படும் என்று டிஎன்சிஏ அறிவித்திருந்தது. அதற்கேற்ப வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு, ஏலம் என கடந்த மாதம் டிஎன்பிஎல் தொடருக்கான பணிகள் தீவிரமாக இருந்தன. சில அணிகளின் நிர்வாகம் மாறியதால் பெயரும் மாற்றப்பட்டன.

சில நாட்களுக்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டது. போட்டிகள் அனைத்தும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் மட்டுமே நடக்கும். இன்று முதல் ஆக.8ம் தேதி வரை லீக் சுற்று நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். தொடர்ந்து ஆக.10ம் தேதி முதல் தகுதிச்சுற்று, ஆக.11ம் தேதி வெளியேற்றும் சுற்று, ஆக.13ல் 2வது தகுதிச்சுற்றும் நடக்கும். ஆக.15ல் பைனல் நடைபெறும். இன்று இரவு 7.30க்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் கோவை-சேலம் அணிகள் மோதும். நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மோதும் ஆட்டம் நாளை நடக்க உள்ளது.

புதிய அணிகள்: மறைந்த முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் நிர்வகித்த வி.பி.காஞ்சிவீரன்ஸ் அணி இப்போது நெல்லை ராயல் கிங்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. டிஎன்பிஎல் தொடரில் முதல் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ் இப்போது சேலம் ஸ்பார்டன்ஸ் என்ற பெயரில் புதிய நிர்வாகத்திடம் உள்ளது. அதேபோல் காரைக்குடி காளை அணி இப்போது ஐட்ரீம் ‘திருப்பூர் தமிழன்ஸ்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை...
டிஎன்பிஎல் தொடர் வழக்கமாக திண்டுக்கல், நெல்லை, சென்னை நகரங்களில் நடைபெறும். தொடர்ந்து சேலம், கோவையிலும் நடத்த 2019ம் ஆண்டு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பீதி காரணமாக இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் அரங்கில் மட்டும் நடத்தப்படுகிறது. கொரோனாவால், ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Tags : Coimbatore ,Salem ,DNPL ,Chepauk , DNPL, First League, Coimbatore - Salem, Chepauk, Multipurpose
× RELATED கைதிகளுக்கு நூலகம் திறப்பு