×

அரசு டவுன் பஸ்சில் பெண்களுக்கான இலவச பயண டிக்கெட்டை ஆண்களிடம் கொடுத்து கட்டணம் வசூலித்த கண்டக்டர் சஸ்பெண்ட்

சேலம்: சேலத்தில் அரசு டவுன் பஸ்சில், பெண்களுக்கான இலவச பயண டிக்கெட்டை பீகார் ஆண்களிடம் கொடுத்து கட்டணம் வசூலித்த கண்டக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, அரசு டவுன் பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய இலவசமாக அனுமதி அளிக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதன்படி ஆட்சிக்கு வந்து முதல்வராக பதவி ஏற்றதும், 5 கையெழுத்துகளில் ஒன்றாக டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்ற வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார்.

அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். மேலும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் டவுன் பஸ்சில் இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3 விதமாக டிக்கெட் அச்சடிக்கப்பட்டு, இலவசமாக பயணிப்போர்களிடம் கண்டக்டர்கள் வழங்கி வருகின்றனர். இதனை டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் ஜங்ஷனில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டிற்கு 13ம் நம்பர் டவுன் பஸ், நேற்று காலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் கண்டக்டராக நவீன்குமார், டிரைவராக பிரகாஷ் ஆகியோர் பணியில் இருந்தனர். 5 ரோடு பகுதியில் பஸ் வந்த போது, டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சில் ஏறி பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது ஜங்ஷனில் இருந்து பஸ்சில் ஏறிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 21 ஆண் பயணிகளுக்கு, பெண்களுக்கான இலவச பயண டிக்கெட்டை கொடுத்து தலா ரூ.6 வசூலித்தது தெரியவந்தது.

இந்த முறைகேடு தொடர்பாக மண்டல போக்குவரத்து மேலாளர் லட்சுமணனுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட கண்டக்டர் நவீன்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. டவுன் பஸ்சில் இதுபோல் இலவச பயண டிக்கெட்டை வழங்கி கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Government Town Bus , Government Town Bus, Free Travel Ticket, Fare, Conductor Suspended
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...