×

பெண்களுக்கு உரிமைகளை பெற்றுத்தந்தது திமுக தான்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

சென்னை: பெண்களுக்கு உரிமைகளை பெற்றுத்தந்தது திமுக தான், என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்தார். எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியின் 131வது ஆண்டு விழாவும், நிறுவனர் விழாவும் நேற்று நடந்தது. இதில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

விழாவில், தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது: இந்த கல்லூரியின் நிறுவனர் எத்திராஜூக்கு கடந்த 1948ம் ஆண்டு கல்லூரி தொடங்க வேண்டும் என்று ஒரு ஆசை வந்தது. அது ஏன் பெண்களுக்கான கல்லூரியை தொடங்கினார் என்ற ஒரு கேள்வி எழுந்தது. இங்கு கல்லூரி நிறுவனர் எத்திராஜூ அவர்களுக்கு பிடித்த வள்ளலார் பாடல்களை இந்த கல்லூரியின் மாணவியர் பாடினர். அந்த பாடலில் இடம்பெற்ற ஒரு வரியை நான் கவனித்தேன். அதில் அழகான சொற்கள் இடம் பெற்று இருந்தன.

அதாவது ‘‘சனாதன மாயை மறைந்தது’’ என்பது தான் அந்த சொற்கள். இது தான் மேற்கண்ட கேள்விக்கான பதில் என்று நான் நினைக்கிறேன். இதை சிலர் அரசியலாக்கிவிடுவார்கள். நான் அரசிலுக்குள் போகவிரும்பவில்லை. ஆக பெண்களின் முன்னேற்றத்துக்காகத்தான் இந்த கல்லூரி. இன்று பெண்கள் முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்காக முதன் முதலில் குரல் கொடுத்தவர் யார் என்றால் தந்தை பெரியார், பின்னர்  அண்ணாவும், கலைஞரும் தான்.  அதன் தொடர்ச்சியை இன்று முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். பெரியார் என்ன செய்தார் என்று கேட்பார்கள். பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னவர் என்று சொல்வார்கள். ஆனால், அவர் பெண்களின் முன்னேற்றத்துக்கு குரல் கொடுத்தவர்.

அந்த காலத்தில் பெண்களுக்கு மரியாதை என்பது இல்லாத காலம். அடுப்படியில் உள்ள பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலம். அதுமட்டுமில்லாமல் சிறுவயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வார்கள். துணை இறந்துவிட்டால் அந்த பெண் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே விதவையாக வீட்டில் வைக்கப்படுவாள். இந்த கொடுமையை பார்த்த பெரியார் அந்த வகை பெண்களுக்கு மறுமணம் செய்ய வேண்டும் குரல் கொடுத்தார். அது தான் அவரின் முதல் குரலாக இருந்தது. அதைத் தொடர்ந்து அண்ணாவும், கலைஞரும் செய்தார்கள்.

குறிப்பாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று இந்தியாவில் முதன் முதலில் சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்தான். அதற்கு பிறகுதான் ஒன்றிய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது. இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது திமுகதான். அதேபோல பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதலில் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்று வைத்திருந்தார்கள். அதை மாற்றி பிளஸ் 2 படித்திருக்க வேண்டும் என்று மாற்றினார் கலைஞர். எதிர் கட்சியினர் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த உதவியைப் பெறுவதற்காகவாவது பெண்களை பிளஸ் 2 வரை படிக்க வைப்பார்கள் என்று தெரிவித்தார் கலைஞர். இன்று நாம் பெண்உரிமையை பற்றிப் பேசுகிறோம். உண்மையில் திமுக கட்சி இல்லை என்றால் பெண்களுக்கு இது போன்ற உரிமைகள் வந்திருக்கவே முடியாது. இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

Tags : DMK is the one who got the rights for women: Dayanidhi Maran MP speech
× RELATED பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்தை...