ஸ்டேன் சுவாமி உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: மறைந்த சமூகப்போராளி ஸ்டேன் சுவாமி உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருச்சியில், 1937ம் ஆண்டு பிறந்த ஸ்டேன் சுவாமி சிறு வயதிலேயே சமூகத் தொண்டாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஸ்டேன் சுவாமி, பெங்களூரில் உள்ள ஜேசுயிட் நடத்தும் இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் போராடினார். இந்திய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். பழங்குடி மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, மேம்பாட்டுக்காக பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட பழங்குடியினர் ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். ஜார்கண்டில் ஆதிவாசிகள் நிலங்களை பாதுகாக்கும் போராட்டத்திற்காக ஸ்டேன் சுவாமி தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

இந்தநிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 5ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்தநிலையில், ஸ்டேன் சுவாமியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ‘நீதிக்கான திருப்பயணம்’ என்ற பெயரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஸ்டேன் சுவாமியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தயாநிதி மாறன் எம்.பி, கனிமொழி எம்.பி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏக்கள் இனிகோ இருதயராஜ் மற்றும் சிந்தனைச் செல்வன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

More