×

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் ஆவின் அதிகாரிகள் 34 பேர் டிரான்ஸ்பர்: நிர்வாகம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும், ஆவினில் பணியாற்றி வரும் 34 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில், பால்வளத்துறையில் பலகோடி ரூபாயும், பணி நியமனங்களிலும் முறைகேடுகள் நடந்திருக்கிறது. எனவே, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஆவின் நிர்வாக  ஊழியர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உத்தரவின் பேரில் நிர்வாக இயக்குனர்  கந்தசாமி, ஆவின் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.18 கோடி வரை இழப்பை ஏற்படுத்தி வந்த ஏஜென்ட் முறையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, பலகோடி ரூபாய் லஞ்சம்  பெற்றுக் கொண்டு நடைபெற்ற பணி நியமனங்களை ரத்து செய்தும், அது தொடர்பான முறைகேடுகள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேலும் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் ஆவின் வரலாற்றிலேயே முதன் முறையாக 34 பொதுமேலாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம்  செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, பால் முகவர்கள் சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினர் வரவேற்றுள்ளனர். மேலும் இதுகுறித்து ஆவின் நிர்வாகம்  பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில்: தலைமை அலுவலகத்தில் பொதுமேலாளராக பணியாற்றி வரும் ரமேஷ்குமார், விழுப்புரத்துக்கும், தலைமை அலுவலகத்தில் துணை பொதுமேலாளராக பணியாற்றி வரும் முத்துக்குமரன், கூடுதல் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்துக்கும், பொதுமேலாளர் அலுவலகத்தில் துணை பொதுமேலாளராக பணியாற்றி வரும் அன்புமணி தலைமை அலுவலகத்துக்கு என தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆவினில் பணியாற்றி வரும் 34 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Avin ,Tamil Nadu , 34 Avin officers working across Tamil Nadu Transfer: Management Action Order
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...