பீகாரில் போலீஸ் ஸ்டேசன் சென்று முதல்வர் மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்: விசாரணை நடத்த எதிர்கட்சி தலைவர் கோரிக்கை

பாட்னா: பீகார் முதல்வர் மற்றும் அதிகாரிகள் மீது மோசடி புகார் தொடர்பாக காவல் நிலையத்திற்கே சென்று ஐஏஎஸ் அதிகாரி புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் மற்றும் பல உயர் அதிகாரிகளுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி 1987ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரி சுதிர் குமார் என்பவர், கர்தானிபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கிட்டதிட்ட 4 மணி  நேரத்திற்கு பின் ஐஏஎஸ் அதிகாரியின் எழுத்துப்பூர்வமான புகாரை போலீசார் வாங்கிக் கொண்டனர். அதுவரை, அவர் காவல் நிலையத்தில் காத்திருந்தார்.

தற்போது மாநில வருவாய் வாரிய உறுப்பினராக உள்ள சுதிர் குமார், காவல் நிலையத்தில் புகாரை கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஐஏஎஸ் அதிகாரி நான் நான்கு மணி நேரம் காவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. புகாரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. நான் கொடுத்த எழுத்துப் பூர்வமான புகாருக்கு ஒப்புதல் மட்டுமே வழங்கப்பட்டது. நான் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரானது, மோசடி தொடர்பானது. புகாரில் குறிப்பிடப்பட்ட அனைத்து நபர்களின் பெயர்களையும் தற்போது கூறமாட்டேன். முதல்வர் நிதிஷ் குமார், பாட்னா முன்னாள் போலீஸ் எஸ்பி அதிகாரி மகாராஜ் ஆகியோர் பெயரை குறிப்பிட்டுள்ளேன்.

போலீஸ் அதிகாரி மகாராஜ், டி.ஐ.ஜி பதவி உயர்வு பெற்றதில் விதிமீறல்கள் உள்ளன’ என்றார்.  இதுகுறித்து கார்தானிபாக் இன்ஸ்பெக்டர் அருண்குமார் கூறுகையில், ‘ஐஏஎஸ் அதிகாரி புகார் அளித்துள்ளார். அவருக்கு ஒப்புதல் சான்று அளிக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படும்’ என்றார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘ஐஏஎஸ் அதிகாரியின் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவ்விவகாரம் குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.

மறைக்க எதுவும் இல்லையென்றால், முழுமையான விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும்’ என்றார். ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக போலீசில் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜாமின் அதிகாரி

முதல்வர் மீது போலீசில் புகாரளித்த ஐஏஎஸ் அதிகாரி சுதிர் குமார், அடுத்தாண்டு தொடக்கத்தில் ஓய்வு பெற உள்ளார். இவர், அரசுப்பணியாளர்கள் ஆட்சேர்ப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியதால், அவர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>