×

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கோரி ஜனாதிபதியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்: மேகதாது பிரச்னை குறித்தும் புகார் அளிக்க திட்டம்

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். தமிழகத்தில், கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தநிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த குழு, தமிழகத்தில் சுமார் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக்களை கேட்டு, 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து கடந்த 14ம் தேதி முதல்வரிடம் ஒப்படைத்தது.

தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்ற கருத்தையே பதிவு செய்துள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார். இந்த சூழலில், செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.  இந்தநிலையில், நீட் தேர்வை ரத்து செய்வது மற்றும் மேகதாது பிரச்னை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து விவாதிக்க முதல்வர்  மு.க.ஸ்டாலின்,  இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இதையடுத்து நாளை(19ம் தேதி) பிற்பகலில் டெல்லியில் ஜனாதிபதியை மு.க.ஸ்டாலின்  சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

அப்போது, ‘தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை,  எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவது, கொரோனா  பாதிப்பால் கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கான பயிற்சி பள்ளிகள்  செயல்படவில்லை. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் நீட் தேர்வு எழுதினாலும்  அவர்களால் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பில் சேர முடியாது. அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதேபோல், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது. தமிழகத்தின் நலனை பாதுகாக்கவும், தமிழக விவசாயிகள் நலனை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்த  திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிகிறது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த மாதம் 17ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பல முக்கிய கோரிக்கைகள்  அடங்கிய மனுவை அளித்தார். இந்தநிலையில், இரண்டாவது முறையாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் ஜனாதிபதியை முதல் முறையாக சந்தித்து பேச இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கிறார்.

சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ படம் திறக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்கவும் ஜனாதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Delhi ,Stalin , Chief Minister leaves for Delhi to meet President seeking action to cancel NEET polls Stalin: Plan to complain about the cloud problem
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு