×

‘ஓபியம்’ சாகுபடியாளர்களிடம் லஞ்சம் ‘ஸ்வீட் பாக்சில்’ ₹16 லட்சம் பதுக்கிய ஐஆர்எஸ் அதிகாரி அதிரடி கைது: ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

கோட்டா: ராஜஸ்தானில் ஓபியம் சாகுபடியாளர்களிடம் லஞ்சம் பெற்ற புகாரில் ஸ்வீட் பாக்சில் ரூ. 16 லட்சம் வைத்திருந்த ஐஆர்எஸ் அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார். மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உரிமம் பெற்ற போதை பொருளான ஓபியம் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தொழிற்சாலை காசிப்பூர் மற்றும் நீமுச்சில் செயல்பட்டு வருகிறது. ​​விவசாயிகளிடமிருந்து பெறப்படும் போதைபொருள் மாதிரிகள், இங்கு பரிசோதிக்கப்படும். அதன்பின், அதன் தரத்திற்கு ஏற்றவாறு ஓபியம் பயிரிடுவோருக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இதற்காக போதைப்பொருள் துறை சார்பில், ஓபியம் போன்ற ரக மரக்கன்றுகளும் வழங்கப்படுகின்றன. குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யப்படுவதால், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்காத விவசாயிகளின் ஓபியத்தை தரமற்றதாகக் கூறி வாங்க மறுத்துவிடுதாக புகார் எழுந்தது. போதை பொருள் பயிரிடுதல் தொடர்பான விவகாரங்களை இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரி தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்பி தாக்கூர் சந்திரஷீல் குமாருக்கு லஞ்ச விவகாரம் தொடர்பான புகார்கள் அதிகளவில் வந்தன. அதையடுத்து காசிப்பூர் மற்றும் நீமுச் ஓபியம் தொழிற்சாலையின் பொதுமேலாளரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான டாக்டர் ஷஷாங்க் யாதவ், லஞ்சப் பணத்துடன் சம்பல் ஆற்றின் தொங்கும் பாலம் டோல் பிளாசா வழியாக காரில் செல்வதாக தகவல் கிடைத்தது. 


அதையடுத்து சம்பவ இடத்தில் ஷஷாங்க் யாதவின் காரை மடக்கிய போலீசார், அவரிடம் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் இருந்து 16 லட்சத்து 32 ஆயிரத்து 410 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோட்டா கூடுதல் எஸ்பி தாக்கூர் சந்திரஷீல் குமார் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட ஷஷாங்க் யாதவின் காரில், ஸ்வீட் பாக்ஸ் இருந்தது. அதில், ரூ. 15 லட்சம் ரொக்கம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும், மடிக்கணினி மற்றும் பணப்பையில் இருந்து 1 லட்சத்து 32 ஆயிரத்து 410 ரூபாயும் இருந்தது. கைது செய்யப்பட்ட ஷஷாங்க் யாதவ், உயர்மட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர், ஓபியம் தொழிற்சாலைகளின் பொதுமேலாளராக இருப்பதால், தனக்கு லஞ்சம் தராத சாகுபடியாளரின் பயிரை தரமற்றதாக கூறி, அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். லஞ்சப் பணத்தை கொடுப்போரின் பயிரை, தரமுள்ளதாக அறிவித்து அவர்களுக்கான பணத்தை கொடுத்துள்ளார். மேலும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு லஞ்சப் புகார்கள் வந்தன. குற்றம் சாட்டப்பட்ட ஐஆர்எஸ் டாக்டர் சஷாங்க் யாதவ், உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் வசிப்பவர் என்பதால், நேற்று அவர் தனது சொந்த ஊருக்கு லஞ்சப் பணத்துடன் செல்லும் போது சிக்கினார்’ என்றார்.



Tags : Rajasthan ,IRS , ‘Opium’, bribe, IRS officer, arrested
× RELATED லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து...