×

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி முதல் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து மோதல்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் இந்தியா தனது முதலாவது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி வரும் 24ம் தேதி டோக்கியோவில் உள்ள தெற்கு பிட்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட ஓராண்டு ஒத்தி வைக்கப்பட்ட 32வது ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி துவங்குகின்றன. இந்தியாவின் சார்பில் 119 வீரர்கள், இந்த ஒலிம்பிக்கில் தடகளம், பாக்சிங், பளு தூக்குதல், பேட்மின்டன் மற்றும் ஹாக்கி உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மன்பிரீத் சிங் சந்து தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நடப்பு ஒலிம்பிக்சில் ஆடவர் ஹாக்கியில் 12 நாடுகளை சேர்ந்த அணிகள், போட்டியிடுகின்றன. 6 அணிகளாக பிரிக்கப்பட்டு, 2 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி அணிகள் இடம் பெற்றுள்ளன.


வரும் 24ம் தேதி இந்தியா, தனது முதலாவது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இரண்டு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் நாடுகள், காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும். வரும் ஆக.1ம் தேதி காலிறுதி போட்டிகளும், ஆக.3ம் தேதி அரையிறுதி போட்டிகளும் நடைபெற உள்ளன. தங்கப்பதக்கத்திற்கான இறுதிப் போட்டி வரும் ஆக.5ம் தேதி நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் ஹாக்கியில், இந்திய அணியே இதுவரை அதிக பதக்கங்களை பெற்றுள்ளது. ஹாக்கியில் 8 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய அணி, மொத்தம் 11 பதக்கங்களை குவித்துள்ளது.  அடுத்தபடியாக 3 தங்கப்பதக்கங்களும் மொத்தம் 8 பதக்கங்களை வென்று, பாகிஸ்தான் 2ம் இடத்தில் உள்ளது.



Tags : India ,New Zealand ,Olympic , Olympic men, hockey, India-New Zealand, conflict
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்