×

எண்ணூர் துறைமுகம்-மீஞ்சூர் இடையே மீன்பிடித்தபோது சரக்கு கப்பல் மோதி விசை படகு மூழ்கியது: கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு

தண்டையார்பேட்டை: எண்ணூர் துறைமுகம்-மீஞ்சூர் இடையே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சரக்கு கப்பல் மோதியதில் விசை படகு சேதமடைந்து மூழ்கியது. கடலில் குதித்து தத்தளித்த 7 மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் இன்று காசிமேடு பகுதியில் பரபரப்பு நிலவியது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்க விசை படகுகளில் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று  காசிமேடு பவர்குப்பத்தை சேர்ந்த கோபால் (50) என்பவருக்கு சொந்தமான விசை படகில் 7 பேர் மீன் பிடிப்பதற்காக வலை, ஐஸ்கட்டி, உணவு பொருட்களுடன் சென்றனர்.  

இதனிடையே, இன்று அதிகாலை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல், எண்ணூர் துறைமுகம்-மீஞ்சூர் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த விசை படகு மீது மோதியது. இதில், விசை படகு சேதமடைந்து கடலில் மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த காசிமேடு மீனவர்கள், உயிருக்கு போராடிய மீனவர்கள் 7 பேரையும் பத்திரமாக மீட்டு காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையறிந்ததும் மீனவர் சங்க தலைவர் அரசு, ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ எபினேசர், மீன்வளத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர்களிடம் நலம் விசாரித்தனர். கடலில் மூழ்கிய விசை படகை மீட்கும் பணியில்  கடலோர காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், சேதமடைந்த விசை படகுக்கும் இழப்பீடு வழங்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடலில் நடந்த விபத்து குறித்து மீன்பிடி துறை போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

இன்று அதிகாலை எண்ணூர் துறைமுகம்-மீஞ்சூர் இடையே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சரக்கு கப்பல் மோதி விசை படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்து மீட்கப்பட்ட சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Ennore Harbor ,Minsur , 7 fishermen rescued after boat capsizes while fishing between Ennore harbor and Minsur
× RELATED மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆலோசனை கூட்டம்