×

சேலம் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடி முதல்நாளில் தேங்காய் சுட்டு பொதுமக்கள் கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம்: சேலம் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடி முதல்நாளில் நடக்கும் பிரசித்தி பெற்ற தேங்காய் சுடும் நிகழ்வு நேற்று கோயில்கள், வீடுகளில் உற்சாகத்துடன் நடந்தது. யுத்தகாலம் என்று அழைக்கப்படும் ஆடி மாதம்,  தமிழ் மாதத்தின் நான்காவது மாதமாக உள்ளது. மாரியம்மன் வழிபாட்டுக்கு உகந்த இந்த மாதத்தை அம்பாள் மாதம் என்றும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். ஆடிவெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை என்று அனைத்து நாட்களும் இந்த மாதத்தில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தின் முதல்நாளில்,  சேலம் மண்டலத்தில் முக்கிய கொண்டாட்டமாக இருப்பது தேங்காய் சுடும் நிகழ்வு. ஒரு தேங்காயை எடுத்து, அதன் மேலுள்ள நார்களை அகற்றி விட்டு கண்களை துளையிடுவர். தேங்காயிலிருந்து தண்ணீரை அகற்றி விட்டு தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல் கலந்த கலவையை போட்டு கூரிய முனை கொண்ட அழிஞ்சி குச்சியில் சொருகுவர். பின்னர், அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை அடைப்பர். பின்னர் ஓரிடத்தில் நெருப்பு மூட்டி குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை சுடுவர். இதனை வீட்டருகில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு எடுத்துச் சென்று வழிபட்டு உடைத்து, அனைவருக்கும் வழங்குவர்.

இந்த நிகழ்வுக்கும் மகாபாரத யுத்தத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் சமய ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ஆடி முதல்நாளில் தேங்காய் சுடும் நிகழ்வானது, மகாபாரத போருடன் தொடர்புடையது என்று புராணங்கள் கூறுகிறது. தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான மகாபாரத போர் ஆடி 1ம்தேதி தொடங்கி 18நாட்கள் நடந்தது. போர் முடிந்த 18வது நாளையே நாம், ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடுகிறோம். இந்த வகையில் ஆடி முதல்நாள் போர் தொடங்கிய போது, வீரர்கள் விநாயகரையும், இஷ்ட தெய்வங்களையும் வழிபட்ட முறை இது. இந்த அடிப்படையில் தான், தற்போதும் ஆடி முதல்நாளில் தேங்காய் சுடும் நிகழ்வு நடந்து வருகிறது,’’ என்றனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் தேங்காய் சுட்டு வழிபடும் நிகழ்வு நேற்று (17ம்தேதி) உற்சாகமாக நடந்தது. கோயில்கள், வீடுகளில் பக்தர்களும், குழந்தைகளும் தேங்காய் சுட்டு விநாயகரை வழிபட்டனர். இதையொட்டி கடைகளில் தேங்காய், அழிஞ்சி குச்சி மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது.

Tags : Audi ,Salem , Coconut-shot public celebration on the first day of Audi in Salem surrounding districts: Special worship at temples
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...