மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை: சுவர், வீடு இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு..! மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

மும்பை: மும்பையில் கனமழையால் சுவர், வீடு இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். செம்பூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் குடிசை வீடுகள் சேதம் அடைந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். விக்ரோலி பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததாகவும் மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன.

ஹனுமன் நகர், கண்டிவலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தொடர் மழை காரணமாக சியோன் ரயில் தண்டவாளப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. காந்தி மார்க்கெட் பகுதியில் சாலைகளை தண்ணீர் மூழ்கடித்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மும்பையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையின் மூன்று குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மிகவும் தாழ்வான பகுதிகளுக்கு செல்லும் நகரப் பேருந்துகள் மாற்று வழித்தடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் செம்பூர் அடுத்த பாரத் நகர் பகுதியில் இன்று காலை சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விக்ரோலி பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததாகவும் மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>