×

மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 30 கடைசி நாள் பல்கலை., கல்லூரிகளுக்கு அக்.1 முதல் புதிய கல்வியாண்டு: யுஜிசி அறிவிப்பு

புதுடெல்லி: பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிக்க வேண்டும். அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய கல்வியாண்டு அமல்படுத்தப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக, இந்தாண்டு தமிழகம் உட்பட  பெரும்பாலான மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த மாணவர்களு க்கான மதிப்பெண் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் அடுத்த  கல்வியாண்டை தொடங்குவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி) நேற்று வெளியிட்டது. ்அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் புதிய கல்வியாண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கப்படும்.
*மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
* அனைத்து பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் வரும் 31ம் (ஜூலை) தேதிக்குள் அறிவிக்கப்பட்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் தாமதம் ஏற்பட்டால், அக்டோபர் 18ம் தேதி முதல் கல்வியாண்டு தொடங்கப்படும்.
* கற்பித்தல், கற்றல் செயல்முறை ஆப் லைன், ஆன் லைன் அல்லது கலப்பு முறையில் தொடர வேண்டும்.
* கொரோனா காலத்தில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி காரணமாக, மாணவர்களின் சேர்க்கை ரத்து அல்லது இடம்பெயர்வு நிலை ஏற்பட்டால், முழு கட்டணத்தை திருப்பித் தரப்படுவதை பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
* ஆகஸ்ட் 31க்குள் பல்கலைக்கழகங்கள்,  கல்லூரிகள் இறுதி ஆண்டு அல்லது இறுதி கால தேர்வுகளை நடத்துவதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தேர்வுகளை ஆப்லைன், ஆன்லைன் அல்லது கலப்பு முறையில் நடத்தலாம்.
* இடைநிலை செமஸ்டர் மாணவர்களின் மதிப்பீடு, உள் மதிப்பீடு மற்றும் முந்தைய செமஸ்டர் முடிவுகளின் அடிப்படையில் இருக்கும்.
* ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனமும் அவ்வபோது மத்திய மற்றும் மாநில அரசு அல்லது தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்படும் நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* அரசால் தடைவிதிக்கப்பட்ட இடங்களில் உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தால், அதற்கேற்ப திட்டமிடலாம்.
இவ்வாறு அது கூறியுள்ளது.


Tags : UGC , Student Admission, University., College, New Academic Year, UGC
× RELATED சைபர் க்ரைம் தொடர்பான இணையவழி...