பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு: டெல்லியில் திடீர் பரபரப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2024ம் ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சியை அகற்றுவேன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி வருகிறார். இதற்காக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடனும் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை நேற்று சரத்பவார் டெல்லியில் திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு 50 நிமிடங்கள் நடந்தன. இந்த சந்திப்பு புகைப்படத்தை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். ஆனால், இருவரும் என்ன பேசினார்கள் என்பது கூறப்படவில்லை. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியில் சமீப காலமாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. சிவசேனா கூட்டணி அரசை திரைமறைவில் இருந்து இயக்கி வருகிறார் சரத்பவார் என்று இம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், இந்த திடீர் சந்திப்பு நடந்தது பல்வேறு  யூகங்கள் எழுந்துள்ளன. ஆனால்,  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் பற்றியும், நாட்டு நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்தும் இருவரும் பேசியதாக பாஜ வட்டாரங்கள் கூறியுள்ளன.

அரசியலாக்க வேண்டாம்: தேசியவாத காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வங்கி திருத்த சட்டம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நாட்டு நலன் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாகவே பிரதமரை சரத்பவார் சந்தித்தார். மகாராஷ்டிரா முதல்வர் தாக்கரேவும் இந்த சந்திப்பை வரவேற்றுள்ளார்.’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More