×

முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா-இலங்கை மோதல்

கொழும்பு: விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி  டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. அதே சமயம், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய புத்தம் புதிய அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக  இலங்கை சென்றுள்ளது. இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காத அனுபவ வீரர்கள், வாய்ப்புக்காக காத்திருந்த இளம் திறமையாளர்களுடன்  இலங்கை சென்றுள்ள அணி ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் அசத்த உள்ளது. கொழும்புவில் தலா 3 ஒருநாள், டி20 போட்டிகளில்  இலங்கையை எதிர்த்து இந்தியா மோதுகிறது. அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடருக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இலங்கை அணி முன்னாள் கேப்டன் ரணதுங்கா உள்ளிட்டோர், ‘பி டீமை அனுப்பி இலங்கையை  அவமானப்படுத்துகிறது இந்தியா. இந்த தொடரில் விளையாட இலங்கை ஒப்புக் கொண்டது தவறு’ என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும்  ஜூலை13ம் தேதி தொடரை தொடங்க இருநாட்டு கிரிக்கெட் சங்கங்களும் உறுதியாக இருந்தன. இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளர்  கிரான்ட்  பிளவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது.  தசுன் ஷனகா தலைமையில் முதல் முறையாக இலங்கை  அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

ஏற்கனவே 2019ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அவர் கேப்டனாக பணியாற்றியுள்ளார். அந்த தொடரில் 3-0 என பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த அனுபவமும் இருக்கிறது. எனினும், மற்ற வீரர்களில் துணை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா மட்டுமே அதிகபட்சமாக 50 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி உள்ளார். மற்றவர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்கள் என்பதுடன், 4 பேர் முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண உள்ளனர். கடைசியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிளில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தாலும், உள்ளூரில் விளையாடுவது  இலங்கைக்கு கூடுதல் பலமாக இருக்கும். அதே நேரத்தில் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி அசத்தக் காத்திருக்கிறது.  

வருண் சக்கரவர்த்தி,   நிதிஷ் ராணா,  சேத்தன் சகாரியா, தேவ்தத் படிக்கல் , ருதுராஜ் கெய்க்வாட், கிருஷ்ணப்பா கவுதம்   என உள்ளூர் ஆட்டங்களில் அசத்திய 6 பேர் முதல் முறையாக சர்வதேச போட்டியில் விளையாட உள்ளனர். ஏற்கனவே சர்வதேச டி20ல் அறிமுகமான   சாம்சன்,  சூர்யகுமார், ராகுல் சாஹர், இஷான் கிஷண் ஆகியோரும் முதல்முறையாக ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பில் உள்ளனர். இளம் அணிகள் மோதும் இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

* இரு அணிகளும் மோதிய கடைசி 5 ஆட்டங்களில் இந்தியா 4-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசியாக நடந்த 10 ஒருநாள் தொடர்களில்,  ஒன்றில் கூட இலங்கை வென்றதில்லை.  இலங்கை, இந்தியா என 2 இடங்களிலும் 2005 முதல் நடந்த இந்த 10 தொடர்களில் ஒரு தொடரில் (2006) மட்டும் டிரா செய்துள்ளது.
* இலங்கை கடைசியாக  மோதிய 6 ஆட்டங்களில்  வங்கதேசத்திடம் 2-1 என்ற கணக்கிலும், இங்கிலாந்திடம் 3-0 என்ற கணக்கிலும்தோற்றுள்ளது.
* இந்திய அணி கடைசியாக  விளையாடிய 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவிடம் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
* இந்த 6 ஆட்டங்களிலும் இந்திய அணியின் ஸ்கோர் 300+ என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Sri Lanka , First ODI, India, Sri Lanka, clash
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...