×

ஒரு துளிக்கூட இங்கேயும், அங்கேயும் செல்லாத எச்.ராஜா பாஜ தலைவர் அண்ணாமலை பேச்சால் கட்சிக்குள் சர்ச்சை: மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி

சென்னை: ஒரு துளிக்கூட இங்கேயும், அங்கேயும் செல்லாதவர் என எச்.ராஜாவை பற்றி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழக பாஜ தலைவராக எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், புதிய தலைவர் பதவியை பிடிக்க, தமிழக பாஜ மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. மீண்டும் தலைவர் பதவியை குறி வைத்து பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், கே.டி.ராகவன், கோவை முருகானந்தம், புரட்சி கவிதாசன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

பலர், டெல்லியில் முகாமிட்டு தலைவர் பதவியை பிடிக்க முயற்சிகளை செய்து வந்தனர். குறிப்பாக தங்களுக்கு வேண்டப்பட்ட பாஜவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர்களையும் அணுகி வந்தனர்.  ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை, தமிழக பாஜ தலைவராக டெல்லி மேலிடம் அறிவித்தது. கட்சிக்குள் சேர்ந்தவுடன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மற்றும் கட்சியில் சேர்ந்து 10 மாதங்களில் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டதை பார்த்து மூத்த தலைவர்கள் மற்றும் கட்சிக்காக இரவு, பகலாக உழைத்தவர்கள் என்று பாஜ நிர்வாகிகள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல் புதிதாக வந்தவருக்கு எப்படி பதவி வழங்கலாம் என்ற கோஷமும் கட்சிக்குள் எழுந்தது.

 புதிய தலைவர் நியமனம் தமிழக பாஜவுக்குள் பூகம்பத்தை கிளப்பி வந்தது. இந்த நிலையில் புதிய தலைவராக அண்ணாமலை நேற்று முன்தினம் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். அவர், தனது அறிமுக உரையில் ஒவ்வொரு தலைவர்களாக பெயரை சொல்லி வாழ்த்தி பேசினார். அதில் முன்னாள் பாஜ தலைவரும், தேசிய செயலாளருமான எச்.ராஜாவை வாழ்த்தி பேசும்போது, ‘தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து ஒரு துளிக்கூட இங்கேயும், அங்கேயும் செல்லாமல் கட்சிக்காக முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா’ என்றார்.

 இந்த பேச்சு பூகம்பத்தை கிளப்பியுள்ளது. அங்கேயும், இங்கேயும் என்றால், எச்.ராஜா பாஜவை விட்டு இன்னும் வெளியே செல்லவில்லையோ; ஏன் இன்னும் கட்சியில் இருக்கிறார் என்ற கோணத்தில் பேசியதாக எச்.ராஜா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கட்சிக்காக இரவு, பகல் பாராமல் உழைத்த ஒரு மூத்த தலைவரை புதிதாக வந்தவர் எப்படி இப்படி பேசலாம் என்ற கருத்தை முன் எடுக்க தொடங்கியுள்ளனர். பாஜவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சில் பணியை தொடங்கியவர் எச்.ராஜா. 1989ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2001ல் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானவர். பாஜ தலைவர், பாஜ தேசிய செயலாளர் என்று உயர் பதவிகளை வகித்தவர். அது பற்றி தெரியாமல் அண்ணாமலை கருத்தை தெரிவித்துள்ளார்.

புகழ்வதற்கு எவ்வளவோ வார்த்தைகள் உள்ளது. ஆனால், இப்படி பேச வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.  ஏற்கனவே, தமிழக பாஜ மூத்த தலைவர்களுக்கு தமிழகத்தில் இதுவரை எந்த கட்சி பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். இளைஞர்களுக்கும், கட்சிக்கு புதிதாக வந்தவர்களுக்கு மட்டும் தான் பதவி வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்துள்ளது. அப்படியே பதவிகள் வழங்கினாலும், தமிழக பாஜவுக்கு சம்பந்தம் இல்லாத பொறுப்பே வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஏதாவது ஒரு மாநில பொறுப்பாளர் பதவி, தேர்தல் பொறுப்பாளர் பதவி என்று தான் வழங்கப்பட்டு வருகிறது.

கட்சிக்காக உழைத்தவர்களை ஓரம் கட்ட நினைத்தால்; தமிழகத்தில் பாஜவை வளர்ப்பது கஷ்டம் என்பதை புதிய தலைவர் அண்ணமாலை புரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்றும் கருத்து எழுந்துள்ளது. அதேநேரத்தில் மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். அவர்களால் கட்சியை வளர்க்க முடியவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால்தான் அவரை வேறு கட்சியில் சேரச் சொல்லித்தான் மறைமுகமாக அண்ணாமலை இப்படி சொல்லியிருக்கலாம் என்றும் பாஜ தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Tags : H. Raja Bajaj ,Annamalai , H. Raja, BJP leader, Annamalai, senior leader, dissatisfied
× RELATED ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா: அண்ணாமலை பரபரப்பு பேட்டி