தேர்தலில் பழி வாங்கப்பட்டேன் இரட்டை தலைமையால் அதிமுக அழிவை நோக்கி செல்கிறது: ஜான்பாண்டியன் பேட்டி

நெல்லை: இரட்டை தலைமையால் அழிவை நோக்கி அதிமுக செல்கிறது, தேர்தலில் நான் பழி வாங்கப்பட்டேன் என தமமுக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் சாடியுள்ளார். நெல்லையில் தமமுக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவுடன் தமமுக உறவு நீடிக்கிறது, ஆனால் கூட்டணி இல்லை. தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு நன்றி செலுத்தும் வகையில்தான் அதிமுக- பாஜ கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். ஆனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், நாங்கள் வளர்ந்துவிடக்கூடாது என்ற வகையிலும் நாங்கள் விரும்பாத சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினர்.

தேர்தலில் நான் பழி வாங்கப்பட்டேன். இதனால்தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தென் மாவட்டத்தில் எங்களுக்கு வாய்ப்பு வழங்கி இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். அதிமுகவில் இரட்டை தலைமை உள்ளதால் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால்தான் கட்சியில் இருந்து பலர் வெளியேறிக் கொண்டு இருக்கின்றனர். அதிமுகவில் ஒரே தலைமைதான் இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் அதிகளவில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். ஓ.பன்னீர்செல்வம் சரியாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து எங்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>