×

தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் குழந்தைகள் கல்வி நிலை என்ன?....விவரம் கோரியது பள்ளி கல்வித்துறை

சென்னை: தமிழக சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி நிலை மற்றும் அவர்களுக்கு சடடப்படி பெற வேண்டிய சலுகைகள் மற்றும் அதன் பயன்கள் அனைத்தும் பெற்றுள்ளார்களா என்பது குறித்து அறிக்கை அனுப்ப தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் முதன்மை கல்வி இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.தமிழக தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவரின் கடிதத்தில், சிறைச்சாலைகளில் உள்ள பெண்களின் குழந்தைகள், அவர்களுடைய கல்வி நிலை குறித்து விவரங்கள் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

மேலும், அக்கடிதத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சிறைச்சாலைகளில் உள்ள பெண்களின் குழந்தைகளின் நிலை என்ற தலைப்பின் கீழ் ஆய்வு மேற்கொண்டன்படி பல்வேறு மாநிலங்களில் இத்தகைய சிறைவாழ் பெண்களின் குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு இலவச கல்விச்சட்டம் 2009 மற்றும் இளைஞர் நீதி சட்டம் 2015 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மேற்கண்ட குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதும் கண்டறிந்து அந்த ஆய்வு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் அத்தகைய சிறை வாழ் பெண்களின் குழந்தைகளின் கல்வி நிலை மற்றும் அவர்கள் சட்டப்படி பெற வேண்டிய சலுகைகள் மற்றும் பயன்கள் அனைத்தும் பெற்றுள்ளனரா என்பது குறித்து விரிவான அறிக்கையினை அனுப்பி வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி நிலை குறித்த விவரங்கள், ஒன்றியம், சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகளின் குழந்தைகள் எவரேனும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயின்று வருகின்றார்களா?

 அவ்வாறாயின் அவர்கள் பயிலும் பள்ளியின் பெயர், வகுப்பு, மாணவர்களின் முகவரி, பள்ளியின் முழு முகவரி மற்றும் இருப்பிடத்தின் முகவரி, சிறையில் உள்ள பெண் கைதிகளின் குழந்தைகளுக்கு வழங்கிய விலையில்லா பொருட்கள் மற்றும் உதவி தொகை விபரங்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,School Education Department , Tamil Nadu, Prison, Female Prisoner, Child, Education Status, School Education
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளி...