×

டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: 2021ம் ஆண்டு இறுதிக்குள் நகராட்சித்தேர்தல் நடத்தப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், எம்.ஆர்.சி நகர், நகர நிர்வாக அலுவலக கூட்டரங்களில் நேற்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வரின் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மீஞ்சூர் மற்றும் வடநெம்மேலியில் 100 எம்.எல்.டி அளவிற்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலிருந்து தமிழகத்துக்கு 727.67 கனஅடி நீர்வரத்தும், ஏரிகளில் 7,288 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. தற்போது தினமும் 851 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் 2021 டிசம்பர் வரை சென்னைக்கு தாராளமாக குடிநீர் கிடைக்கும். 100  எம்.எல்.டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.914.42 கோடி மதிப்பில், 2010ம் ஆண்டு அப்போதைய தமிழக துணை முதலமைச்சரும் தற்போதைய தமிழக  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் அடிக்கல் நாட்டினார்.

தற்போது  இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.  ரூ.1,259.38 கோடி மதிப்பீட்டில்  நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை எதிர்மறை  சவ்வூடு முறையில் குடிநீராக்கும் திட்டப்பணி  தொடங்கப்பட்டு தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. இத்திட்டம் ஏப்ரல் 2023க்குள் முடிக்கப்பட்டு மக்கள்  பயன்பாட்டிற்கு வரும். இதன் மூலம் சுமார் ஒன்பது லட்சம் மக்கள்  பயன்பெறுவார்கள். மேலும்,  பேரூரில், ரூ.6078 கோடி மதிப்பீட்டில், 400  எம்.எல்.டி. உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்  அமைக்கும் திட்டம்  செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இத்திட்டம் டிசம்பர் 2025க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு  வரும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 22 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக முதல்வர் அறிவித்துவிட்டார். இதேபோல், நகராட்சிகளில் வரும் புகார்களை சரிசெய்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் எங்கள் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் நடத்துவது குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு கூறினார்.

Tags : Internal ,Minister ,K. My. Nehru , December, Local Elections, Minister KN Nehru
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...